தென்காசி: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார்.
தற்போது, ஜான் பாண்டியன் ஒருபுறம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், ஜான் பாண்டியனின் மகளும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில மகளிர் அணித் தலைவியுமான வினோலின் நிவேதா, தனது அப்பாவின் வெற்றிக்காக மேளதாளங்கள் முழங்க வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று, வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றியம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.
துவக்கத்திலேயே மேளதாளங்கள் முழங்க வாசுதேவநல்லூரில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர் ஒவ்வொரு வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் அவர் கூறியதாவது, “இந்த பிரச்சாரம் வெற்றியின் பாதையை நோக்கித் தான் செல்கிறது. குடும்பமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.
மக்களின் ஆரவாரத்தையும், ஆதரவையும் பார்க்கும் போது கண்டிப்பாகத் தென்காசியில் தாமரை மலரும் என்று தெரிகிறது. மக்களும் அவர்களின் பிரச்சினைகளை எங்களிடம் முன்வைக்கின்றனர். கண்டிப்பாக அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவோம்” என்று கூறினார்.
இந்த பிரச்சாரத்தின் போது, பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு ஒன்றிய தலைவர் சுப்பிரமணியபுரம், பஞ்சாயத்துத் தலைவர் ராம்குமார், அமமுக கட்சி நகரச் செயலாளர் அம்மா தாசன், OPS அணி நகரச் செயலாளர் சீமான் மணிகண்டன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: 'பாஜக தீபத்தில் அதிமுக இணையும்..பைனாகுலரிலும் கிடைக்காத தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி' - கே.பாலகிருஷ்ணன் - Lok Sabha Election 2024