தென்காசி: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார்.
தற்போது, ஜான் பாண்டியன் ஒருபுறம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், ஜான் பாண்டியனின் மகளும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில மகளிர் அணித் தலைவியுமான வினோலின் நிவேதா, தனது அப்பாவின் வெற்றிக்காக மேளதாளங்கள் முழங்க வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
புளியங்குடி நகரில் வீதி வீதியாகச் சென்று, நாட்டாண்மை மற்றும் பொதுமக்களை தென்காசி நாடாளுமன்ற அமைப்பாளர் ஆனந்தன் அய்யாசாமி தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மாநில மகளிர் அணித் தலைவி வினோலின் நிவேதா வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, அவர்கள் சிந்தாமணியில் மறைந்த இராணுவ வீரர் பார்த்திபன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், பாஜக நகர் தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் பாஜக நிர்வாகிகள் மாரிஸ், மகாலட்சுமி, கணேசன், மகேஸ்வரி, உமா, காமராஜ், மாரியப்பன், சேகர், மாலீஸ்ராஜ், புளியங்குடி நகர் நிர்வாகிகள், கிளைத் தலைவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, தருமபுரி தொகுதி எம்பி வேட்பாளர் சௌமியா அன்புமணிக்காக அவரது 3 மகள்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்காக, அவரது மனைவி அனுராதா தினகரனும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.