சென்னை: விருகம்பாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியில் லோகநாயகி என்பவர் சமூக வலைத்தளத்தில் லைவ் வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், வீட்டு உரிமையாளர், வழக்கறிஞர்கள் சிலரோடு வந்து தனது வீட்டில் இருந்த பொருட்களை தூக்கி வெளியே வீசியதாகவும், தனது 16 வயது மகளை தாக்கியதாகவும் குறிப்பிட்டு அழுதார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த லோகநாயகி கணவரைப் பிரிந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்வார் திருநகரில் உள்ள பழனி என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியேறியுள்ளார். இந்த நிலையில், லோகநாயகிக்கும், பழனி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை பயன்படுத்திக் கொண்ட லோகநாயகி, வாடகைக்கு இருந்த வீட்டை மற்றொரு நபரிடம் ரூபாய் 6 லட்சத்திற்கு லீசுக்கு விட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனை அறிந்த பழனி, வீட்டை விட்டு வெளியேறக் கூறியுள்ளார். அப்போது லோகநாயகி, தான் வளர்த்த நாயை விட்டு பழனியை கடிக்கச் செய்துள்ளதும் தெரியவந்தது.
இந்த நிலையில் தான் பிரச்னை என லோகநாயகி தன்னை தாக்குவதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. லோகநாயகியின் நாய் கடித்ததில், வீட்டின் உரிமையாளர் பழனிக்கு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதே பிரச்னையில் கடந்த மாதம் வீட்டின் உரிமையாளர் பழனியை லோகநாயகி தனது தம்பியை வைத்து அடித்த சம்பவத்தில், லோகநாயகியின் மீது விருகம்பாக்கம் போலீசார் ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், தாக்குதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொதுமக்களை மிரட்டி ஜிபே மூலம் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை!