சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரக்கூடிய நிலையில் தற்போதைய வானிலை குறித்து விளக்க, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “கடந்த 24 மணி நேரத்தில் கரூர், ஈரோடு, தருமபுரி, திருப்பத்தூர், திருத்தணி உள்ளிட்ட வட உள் தமிழக மாவட்டங்களில் 10 இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது 42 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூரில் 44.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 7.5 செல்சியஸ் அதிகம்.
வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவியது. அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு தமிழகத்தின் உள் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 4 செல்சியஸ், வட உள் தமிழக மாவட்டங்களில் இயல்பை விட 3 முதல் 5 செல்சியஸ் அதிகமாக பதிவாகக்கூடும். மே 6ஆம் தேதி வரை வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. அடுத்து வரும் ஐந்து தினங்களுக்கு உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக்கூடும். மே 7ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
கடந்த மார்ச் ஒன்று முதல் இன்று வரைக்கான காலகட்டத்தில் இயல்பு மழையளவு 6 சென்டி மீட்டர் பெய்துள்ளது. இது 74 சதவீதம் இயல்பை விடக்குறைவாக பெய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு தினங்களுக்கு 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் பதிவாகக்கூடும். கோடை மழை குறைந்ததும் வெப்பநிலை அதிகமாக இருப்பதற்கு ஒரு காரணமாக இருக்கும். தற்போதய நிலை வரை சென்னையில் கோடை மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை” என தெரிவித்தார்.
மேலும், நாளை அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ள நிலையில், அது குறித்து பேசியவர், கத்திரி வெயில் காலத்தில், முதல் ஒரு வாரத்தில் உள் தமிழகம் மற்றும் வட தமிழக பகுதிகளில் மூன்று முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகமாக இருக்கக்கூடும். இடையில் கோடை மழை பெய்தால் குறையலாம், ஆனால் மீண்டும் அதிகரிக்கும்.
ஏப்ரல் மாதத்தில் ஈரோட்டில் 6 தினங்களும், கரூரில் நான்கு தினங்களும் வெப்ப அலை இருந்துள்ளது. ஈரோட்டில் 27 நாட்கள் 40 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வெப்ப அலை வீசுவது இரண்டு மூன்று நாட்கள் அதிகமாக உள்ளது. பொதுவாக எட்டு நாட்கள் வெப்ப அலை வீசும். தற்போது வரை ஆறு நாட்கள் வெப்ப அலை வீசி உள்ளது. இது இயல்பை ஒட்டித்தான் உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்! - Vijayakanth Memorial World Record