தேனி: தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில், பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், மாவட்ட அளவிலான அரசுப் பள்ளி மேலாண்மைக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.சஜீவனா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் 530 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மேலாண்மைக் குழு தலைவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும், அவற்றின் செயல்பாடுகளுக்காகவும் மற்றும் மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிப்பதற்காகவும் அரசு சார்பில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேலாண்மைக் குழுவில், அந்தந்த அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், இன்று (பிப்.08) தேனி மாவட்டத்தில் நடைபெற்ற அரசுப் பள்ளி மேலாண்மைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில், அரசுப் பள்ளிகளின் வளர்ச்சி குறித்து கல்வியாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் பேசிக் கொண்டிருக்கையில், கூட்டத்திற்கு வருகை தந்த மேலாண்மை குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள், தங்களது செல்போன்களை பயன்படுத்தியபடி இருந்தனர்.
மேலும் சிலர், தங்களது செல்போன்களில் வாட்ஸ்ஆப்-ல் குறுஞ்செய்தி அனுப்புவது, சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்திக் கொண்டு அருகில் இருப்பவர்களிடம் பேசிக் கொண்டிருப்பது மற்றும் புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களுக்கு முக்கியத்துவம் காட்டியதால், அரசுப் பள்ளிகளின் வளர்ச்சி குறித்து நடைபெற்ற கூட்டம் சலசலப்புடன் காணப்பட்டது.
இதையும் படிங்க: பணம் கேட்டு மிரட்டிய புதுப்பட்டினம் காவலர் சஸ்பெண்ட்; பைக் மோதிய விபத்தில் பதவியை விட்டது எப்படி?