சென்னை: பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பணியில் 3 ஆயிரத்து 192 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் பிற துறைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 192 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வுக்கு 41 ஆயிரத்து 485 தேர்வர்கள் விண்ணப்பம் செய்தனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு 130 மையங்களில் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி நடத்தப்பட்டது.
தமிழ் மொழி திறன் அறிவிற்கான 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கும், முதன்மைப் பாடத்தில் (தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல்) இருந்து 150 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கும் இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து, தேர்வுக்கான வினாக் குறிப்புகள் பிப்ரவரி 19ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் https://www.trb.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து, தேர்வர்கள் பிப்ரவரி 25ஆம் தேதி வரையில் தங்களின் சந்தேகங்களை ஆதாரங்களுடன் தெரிவிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2023-ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் 3 ஆயிரத்து 192 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 13, 2023ஆம் ஆண்டு வரை தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, ஆன்லைன் மூலம் 41 ஆயிரத்து 485 பேர் விண்ணப்பம் செய்தனர். ஓஎம்ஆர் OMR (Optical Mark Reader) வழியில் 40 ஆயிரத்து 136 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில், 2023-ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநருக்கான ஓஎம்ஆர் OMR (Optical Mark Reader) வழியில் நடத்திய போட்டித் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் கடந்த மே 18 மற்றும் 22 அன்று வெளியிடப்பட்டன.
தேர்வு எழுதிய தேர்வர்களின் ஓஎம்ஆர் மதிப்பெண்களுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-க்கு தகுதி பெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்களை (Weightage marks) சேர்த்து மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில், பாடங்களுக்கு 1:1.25 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு அழைப்பு கடிதம், ஆளறிச் சான்றிதழ் படிவம் மற்றும் சுயவிவரப்படிவம் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தங்களது அழைப்புக் கடிதம், ஆளறிச் சான்றிதழ் படிவம் மற்றும் சுயவிவரப்படிவம் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு தெரிவித்துள்ளது.
மேலும், அழைப்புக் கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படமாட்டாது என பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட சான்றிதழ் சரிபார்ப்பு சார்ந்த கோரிக்கைகளை trbgrievances@tn.gov.in மற்றும் 18004256753 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். பிற வழி கோரிக்கைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும், 2023-ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பணித்தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து அனைத்து விவரங்களும் வெளிப்படையாக இணையதளத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மே 30, 31 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கு பாடத்திற்கு சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில் மே 30, 31 ஆகிய தேதிகளிலும், தாவரவியல் பாடத்திற்கு விருகம்பாக்கம் ஜெயகோபால் கரடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், விலங்கியல் பாடத்திற்கு சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், புவியியல் படத்திற்கு சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில் 30-ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாட வாரியாக தேர்வு எழுதியவர்களில் பிறந்த தேதி, டெட் தேர்வில் பெற்ற மதிப்பெண், தற்போது பெற்ற மதிப்பெண் வெயிட்டேஜ் மதிப்பெண் ஆகிய விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வைகோவுக்கு எலும்பு முறிவு.. விரைவில் அறுவை சிகிச்சை! - Vaiko