தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவியை, ரெக்கார்ட் நோட் எழுதி வரவில்லை என்ற காரணத்திற்காக, அந்தப் பள்ளியின் உயிரியல் ஆசிரியர் அவரின் உடலில் பிரம்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவி தனக்கு உடல்நிலை சரியில்லாததாகக் கூறி கையில் அடிக்குமாறு கேட்டுள்ளார்.
அதற்கு ஆசிரியர், மாணவியை இரட்டை அர்த்தங்களால் பேசியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, மாணவி பெற்றோரிடம் கூறவே, அவரது பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் வந்து இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். அதன்படி, உயிரியல் ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.
இந்த நிலையில், அந்தப் பள்ளியில் பயின்று வரும் சக மாணவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் தங்களுக்குத் திரும்ப வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பள்ளி நிர்வாகம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானம் செய்துள்ளது. இருப்பினும், அந்த மாணவர்கள் அதோடு விட்டுவிடாமல், சமூக வலைத்தளத்தில் (இன்ஸ்டாகிராம்) குரூப் ஒன்றை தொடங்கி, அதில் மாணவி குறித்து ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சக மாணவர்களின் இத்தகைய நடவடிக்கை குறித்து அறிந்த மாணவி, தனது பொற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் பொற்றோர் மற்றும் உறவினர்கள், புகார் அளிப்பதற்காக நேற்று (பிப்.6) பள்ளிக்குச் சென்று அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மாணவியின் உறவினர்கள், பள்ளி ஆசிரியரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, தகவலின் பேரில் சென்ற போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மாணவியின் பெற்றோர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆபாசமாக நடந்து கொண்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு ஒன்றை அளித்துள்ளனர்.
மேலும், அருகில் உள்ள காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மாணவியின் உறவினர்களால் தாக்கப்பட்ட ஆசிரியரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில், மாணவியின் உறவினர்கள் 10 பேர் மீது செங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பொது சிவில் சட்டம் என்றால் என்ன? மக்களவை தேர்தலுக்கு முன் நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஏன் தீவிரம்?