தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாணவிகளிடம் கணித ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, மாணவிகள் ஒரு சேர அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் முத்துக்குமரன். இவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சைல்டு ஹெல்ப்லைன் (Child help Line - 1098) அமைப்பிற்குத் தகவல் வந்துள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில், சைல்டு ஹெல்ப்லைன் அமைப்பினர், குறிப்பிட்ட பள்ளிக்குச் சென்று 9 மற்றும் 10ஆம் வகுப்பு படித்து வரும் 42 மாணவிகளிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். மேலும், ஒவ்வொரு மாணவியிடமும் தனித்தனியாக தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எழுதித்தரச் சொல்லி வாங்கியுள்ளனர்.
அதில், மாணவிகள் அனைவரும் எழுதிக் கொடுத்தது ஒரே மாதிரியாக இருந்தது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து, கணித ஆசிரியர் முத்துக்குமரன் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டு, இதுதொடர்பாக தயார் செய்த அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் சைல்டு ஹெல்ப்லைன் அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
அந்த அறிக்கையின் அடிப்படையில், கணித ஆசிரியர் முத்துக்குமரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், சைல்டு ஹெல்ப்லைன் அமைப்பினர், இதுகுறித்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த ஆசிரியர் முத்துக்குமாரனைத் தேடி கண்டு பிடித்த போலீசார், தனி இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, சைல்டு ஹெல்ப்லைன் அளித்த புகாரின் அடிப்படையில், ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தார். விசாரணைக்குப் பின்னர், ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆசிரியரை ஆஜர்படுத்தினர்.
அப்போது, ஒரத்தநாடு குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆசிரியர் முத்துக்குமரனை வரும் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதையடுத்து, முத்துக்குமரன் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்