சென்னை: நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் அரசு பேருந்தில் பயணித்த காவலர் டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சில தினங்களுக்கு முன் வைரலானது. அதுதொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு பல்வேறு விவாதங்களை கிளப்பியது. இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் அரசுப் பேருந்துகளை வளைத்து வளைத்து அபராதம் விதித்து வருகின்றனர்.
நேற்று (மே 23) மட்டுமே, 'நோ பார்க்கிங்', 'ஓவர் ஸ்பீடு' உள்ளிட்ட காரணங்களை கூறி, சென்னை உட்பட பல்வேறு இடங்களில் சுமார் 22 அரசுப் பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். இதேபோல, இன்று ஈரோட்டில் ஒரு வழி பாதையில் வந்த 12 அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவைதவிர, பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக பயணிகளை ஏற்றி செல்வதற்கும் அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அரசு பேருந்துகள் மீது காவல் துறை அபராத நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருப்பதாகவே இது பார்க்கப்படுகிறது.
நாங்குநேரி சம்பவம்தான் காரணமா?: போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரமும், பொறுப்பும் போக்குவரத்து போலீசாருக்கு இருக்கிறது. எனினும், நாங்குநேரியில் டிக்கெட் எடுக்காமல் நடத்துனரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட காவலர் ஆறுமுகபாண்டி மீது நடவடிக்கை எடுக்க, போக்குவரத்து துறை பரிந்துரை செய்த பிறகுதான் அபராத நடவடிக்கை வேகமெடுத்துள்ளது என்பதே பலதரப்பினரின் கருத்தாக உள்ளது.
குறிப்பாக, ஈரோட்டில் இன்று ஒருவழிப் பாதையில் வந்த அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலித்துள்ளனர். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்களில் பலர் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதும், அவர்களை போக்குவரத்து போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. அரசுப் பேுருந்துகளை மட்டும் நிறுத்தி அபராதம் விதிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ, போக்குவரத்து போலீசார், அரசுப் பேருந்துகளை குறிவைக்கின்றார்களா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
அரசுக்கே அபராதமா?: மேலும், அரசு பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட கூடுதல் பயணிகளை ஏற்றி செல்வதற்கு போலீசார் அபராதம் விதிப்பதென்பது அரசின் மீதே அபராதம் விதிப்பதை போல என்கின்றனர் பயணிகள். பீக் ஹவர்சில் போதுமான பேருந்துகள் இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் வேறு வழியின்றி ஒரே பேருந்தில் ஏறி நின்றுகொண்டே பயணிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இந்த சூழலில், போக்குவரத்து போலீசார் பேருந்தை நிறுத்தி அபராதம் விதிக்கும்போது தாங்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதாக பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு போக்குவரத்து மற்றும் காவல் துறைக்கான விதிமுறைகள் குறித்த தெளிவான வழிகாட்டுதலை வெளியிட்டு பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பலதரப்பிலும் எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'காவலர்கள் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ளும் விஷயத்தில் தமிழக அரசுத் தரப்பில் இரு ஆண்டுகளாகக் காட்டப்படும் அலட்சியம் காவல்துறைக்கும், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் இடையிலான மோதலாக மாறிவிடக் கூடாது. இதேநிலை தொடர்ந்தால், இது காவல்துறைக்கும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் இடையிலான மோதலாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. அத்தகைய மோதல் ஏற்பட்டால் அது பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மட்டுமின்றி, தமிழகத்தின் சட்ட ஒழுங்கையும் பாதிக்கக்கூடும். அதற்கு முன்பாக இந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பட வேண்டும்'' என்று ராமதாஸ் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
பழிவாங்கும் நடவடிக்கை?: 'போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிப்பது சரியே.ஆனால், தங்களின் துறைக்கு நேர்ந்த அவமானத்திற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக இதை கருதி, பேச்சுவார்த்தை நடத்தி 'சமரசம்' ஏற்பட்டது என்று அறிவித்துவிட்டு மீண்டும் முந்தைய நிலைக்கே சென்றுவிடாமல், காவல்துறையினர் இந்த நடவடிக்கைகளை தொடர வேண்டும். சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களுக்கு இந்த விவகாரம் ஒரு பாடமாக இருக்கட்டும்' என்று பாஜக மாநில துணைப் பொதுச் செயலாளர் நாராயணன் திருப்பதி இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசுப் பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் செல்லலாமா? பயணிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்ன?