சென்னை: 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் விலை ரூ.40 முதல் ரூ.80 வரையில் உயர்ந்துள்ளன. காகிதங்களின் விலை உயர்வு, அச்சடிப்பதற்கான கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 5 ஆண்டுகளுக்கு பின்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது, "2025-2016 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடநூல்களின் உற்பத்தி செலவினம் கணக்கிடப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2018-2019 ஆம் கல்வியாண்டில் 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் தரம் உயர்ந்த எலிகண்ட் பிரிண்டிங் பேப்பர் 80 ஜிஎஸ்எம் தாள் மற்றும் 230 ஜிஎஸ்எம் ஆரா போல்டு புளு போர்டு மேலட்டை கொண்டு அச்சுப்பணி மேற்காெண்டு புதிய பாடநூல்களின் விலையினை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டது.
2019 - 2000 ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டத்தின்படி, அச்சடிக்கப்படும் முறையே 2, 7, 10, 12 மற்றும் 3, 4, 5,8 ஆகிய வகுப்பு பாடநூல்களின் பக்க எண்ணிக்கையை கொண்டு, ஒரு பாடநூலின் விற்பனை விலையினை நிர்ணயம் செய்வதற்கு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர், மாநிலத்தில் உள்ள அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடநூல்களும் மற்றும் மெட்ரிகுலேஷன், இதர தனியார் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு விற்பனை விலை பாடநூல்களாக 1 முதல் 7 ஆம் வகுப்புகளுக்கு மூன்று பருவங்களாகவும், 8 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு பதிப்பாகவும் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
2018- 2019 ஆம் ஆண்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டதை காட்டிலும், தற்போது பாடநூல்களுக்கான உற்பத்தி பொருட்களான தாள் 57 சதவீதமும், மேலட்டை 27 சதவீதமும் மற்றும் அச்சுக்கூலி 2 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு பாடபுத்தகத்திற்கான உற்பத்தி செலவினம், விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்ட 2018 - 2019ஆம் ஆண்டினைவிட சராசரியாக 45 சதவீதம் உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் அச்சிடப்படும் பாடப்புத்தகங்களுக்கு, 2024 - 2025 ஆம் கல்வியாண்டு முதல் 1ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரையுள்ள மூன்று பருவங்கள் மற்றும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள தமிழ்வழி பாடநூல்கள் மற்றும் சிறுபான்மை மொழிப்பாடநூல்களை விற்பனை விலை மறு நிர்ணயம் செய்தும், தமிழ்வழி பாடநூல்களின் விற்பனை விலையினையே, ஆங்கில வழி மற்றும் சிறுபான்மை வழி பாடநூல்களுக்கும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடப்புத்தகத்திற்கும் ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலையில் இருந்து பக்கங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 40 ரூபாய் முதல் அதிகப்பட்டசமாக 80 ரூபாய் வரையில் ஒவ்வொரு புத்தகத்திற்கும் விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்.. உதயநிதி ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்?