சென்னை: விவசாயிகளிடம் வாங்கப்படும் நெல், வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான 21 அரிசி ஆலைகளிலும், அதனிடம் அனுமதி பெற்ற 595 தனியார் ஆலைகளிலும் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படுகிறது.
அரசின் 21 நவீன அரிசி ஆலைகள் 47 ஆயிரம் மெட்ரிக் டன் மாதாந்திர ஹல்லிங் திறன் கொண்டது. 15 ஆலைகளில் புழுங்கல் அரிசியும், மற்ற ஆறு ஆலைகளில் மூல அரிசியும் உற்பத்தி செய்யப்படுகிறது. அரிசியின் உமிழும் திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த ஆலைகள் படிப்படியாக நவீனப்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், புதிதாக ஐந்து அரிசி ஆலைகளை அமைக்க தனியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் டெண்டர் கோரியுள்ளது. இதன்படி, தனியார் நிறுவனங்கள், தஞ்சையில் 500 டன் நெல்லை தினமும் அரிசியாக மாற்றும் இரண்டு ஆலைகளும், அதே திறனில் திருவாரூரில் இரண்டு, கடலுாரில் ஒரு ஆலையும் அமைக்க வேண்டும்.
இந்த ஐந்து தனியார் ஆலைகள் வாயிலாக, தினமும் 2 ஆயிரத்து 500 டன் நெல் அரிசியாக மாற்றப்பட உள்ளது. அந்நிறுவனங்கள் ஆலை அமைத்து, வாணிபக் கழகத்திற்கு மட்டும் அரிசி சப்ளை செய்ய வேண்டும். இதற்காக தொடர்ந்து நெல்லும், அதற்கான அரவைக் கூலியும் வழங்கப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.