சென்னை: தெலங்கானா மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளிலும் வருகிற மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை செந்தரராஜன், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தேர்தல் பிரச்சாரத்திற்காக தெலங்கானா சென்றார்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் 3-வது முறை பிரதமராக வர வேண்டும். அதற்கு தெலங்கானா முக்கிய பங்காற்ற வேண்டும். அதனால் தெலங்கானாவுக்கு நான் பிரச்சாரத்துக்குச் செல்கிறேன்.
தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடைத்துள்ளது, நீதியும் கிடைத்துள்ளது. வி.பி.சிங் முதல் மன்மோகன் சிங் வரை மத்தியில் அவர்கள் ஆண்டபோது வழங்கப்பட்ட திட்டங்களைக் காட்டிலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அதிக திட்டங்களை தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்கிறது.
இந்தியாவிலேயே முதியோர்களுக்கான மருத்துவமனை இரண்டு இடங்களில் திறக்கப்பட்டது. அதில் சென்னையும் ஒன்று. நிதியை பொறுத்தமட்டில், வறட்சி நிவாரணமாக இருக்கட்டும், வெள்ளமாக இருக்கட்டும் அதற்கென கணக்கீடு உள்ளது. அதன்படி, பிரதமர் நிவாரணம் வழங்கியுள்ளார்.
இரண்டாம் கட்ட தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு குறைந்தபட்ச இடங்களே கிடைக்கும் என எதிர்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் பொத்தாம் பொதுவாக சொல்கிறார்கள். நாங்கள் முன்னணியில் தான் இருக்கிறோம் என்பதை தெளிவாக எங்களால் சொல்ல முடியும். பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே வலிமையான பிரதமரைக் கொடுக்க முடியும்.
கேரளாவில் என்ன நடக்கிறது? காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது. பிறகு எப்படி அவர்கள் இந்தியா கூட்டணியை முன்வைத்து வெற்றி பெறுவார்கள்? இன்று பிரியங்கா காந்தி பினராய் விஜயனை விமர்சித்துப் பேசுகிறார். பிறகு எப்படி நீங்கள் ஒன்றாக இருந்து ஆட்சி புரிய முடியும்?" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி ஆகிய இருவருக்கும் விளக்கம் கேட்டு அவர்களது பேச்சு குறித்து பதிலளிக்க நோட்டீஸ் வழங்கியிருக்கிறது. பிரதமர் மீது வேண்டுமென்றே வெறுப்பு அரசியல் என குற்றம் சாட்டப்படுகிறது.
சிறுபான்மை மாணவர்கள் மற்றும் அவர்களை உயர்த்துவதில் பிரதமருடைய பங்கு அதிகமானது. நாம் என்ன சொல்கிறோமோ, அதை தேர்தல் அதிகாரி செய்ய வேண்டும் என நினைக்கக்கூடாது. மணிப்பூர் மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சுமூகமாக நடந்து முடிந்துள்ளது.
மணிப்பூர் பிரச்னை என்பது இன்று ஆரம்பித்தது அல்ல. அதில் பல்வேறு உள் பிரச்னை இருக்கிறது. அது சரி செய்யப்பட வேண்டும் என்பதுதான் எனது ஆசை. கலவரத்தை அரசியல் செய்யும் விதத்தில் எதிர்கட்சிகள் செயல்படுகிறது. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே அவர்கள் போதைப்பொருட்களை வைக்க இடம் கொடுப்பது, நான் போட்டியிட்ட தென்சென்னை மக்களவைக்குட்பட்ட கண்ணகி நகரில் போதைப் பழக்கம் அதிகமாக இருப்பது உள்ளிட்டவைகளை மாற்ற வேண்டும்.
அங்கு இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என அங்குள்ள தாய்மார்கள் என்னிடம் கோரிக்கை வைத்தனர். ஜாபர் சாதிக் உள்ளே இருந்தால் கூட அவர் சாதிக்க வேண்டியதை சாதித்து விட்டார். தி.மு.க.வும், சாதிக்கும் ஒரு மிகப்பெரிய கூட்டணி போட்டார்கள். சாதிக் மற்றும் தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி கண்டுள்ளது. போதைப் பழக்கத்தில் இளைஞர்கள் பரிதவித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.
ஏற்கனவே வேங்கைவயல் சம்பவத்திற்கு நீதி கிடைக்காத நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மற்றொரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. மாட்டுச்சாணம் தண்ணீரில் கலக்கப்பட்டு இருக்கிறது. மேலும், பாரதிய ஜனதா கட்சிக்கு தோல்வி பயம் இல்லை. வெற்றிக் களிப்போடு சென்று கொண்டிருக்கிறேன்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: எப்பூடி.. வேப்பிலை தொப்பி அணிந்து சாலையின் நடுவே பணிபுரியும் பெண்கள்! - Neem Leaves Cap