கோயம்புத்தூர்: 2024 நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 11) குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) நாடெங்கும் அமல்படுத்தி உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. இந்த குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அப்போது முதலே, இச்சட்டத்திற்கு அரசியல் கட்சிகள், தனியார் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பலரிடம் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், தற்போது மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, இச்சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும், சமூக நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பின்மையையை சீர்குலைக்கும் எனவும் அனைத்து தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் மற்றும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு அமல்படுத்தியுள்ள இந்த சிஏஏ சட்டத்திற்கு, நாடு முழுவதும் உள்ள பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதேபோல, தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் இச்சட்டத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
அதில், நாட்டு மக்கள் அனைவரும் சமூக நல்லிணக்கத்துடன் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கதல்ல எனவும், தமிழகத்தில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், கோவை மாநகரில் லங்கா கார்னர், நஞ்சப்பா சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சட்டம் ஏற்கத்தக்கது அல்ல என தமிழக வெற்றிக் கழகம் கோவைத் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
அந்த போஸ்டரில் "பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (2019) ஏற்கத்தக்கது அல்ல" "Withdraw CAA" என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என குறிப்பிட்டு விஜய்யின் கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் தொழிலாளி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. மகனே தந்தையை கொல்ல காரணம் என்ன?