சென்னை: திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், மறைந்த பெரியாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்.
— TVK Vijay (@tvkvijayhq) September 17, 2024
மக்களை பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர். சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜனநாயக ஒளி ஏற்ற வருகிறார்.. தளபதி 69 அப்டேட் வெளியானது!
அது மட்டுமல்லாமல், இன்று தனது 74வது பிறந்தநாள் காணும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்; உங்களில் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
அதேநேரம், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய், ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது பெரியார் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக நீதிப் பாதையில் பயணிப்போம் என அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் திரைப்படம் மிகப்பெரிய வசூலைக் குவித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இதன் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதுவே விஜயின் கடைசி படமாகும்.