சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதில் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 80-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரது நிலை மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத், உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாந்த் கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, ரஜத் சதுர்வேதி புதிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜய், தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "டாஸ்மாக்கிற்கு இணையாக ஆளுங்கட்சி ஆதரவுடன் கள்ளச்சாராயம் விற்பனை" - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு! - Kallakurichi Illicit Alcohol issue