சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். தயாரிப்பாளர்களின் நடிகராக இருக்கும் விஜய் ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் வெளியானது.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வந்த நிலையில், அதனை 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார்.
மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றிய பிறகு பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர். குறிப்பாக 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தல், மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் நியமித்து கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையைப் பலப்படுத்தி வருகிறார்.
இதற்காக ஆன்லைன் மூலம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே போல் முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய், இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். இந்த ஆண்டும் வழங்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இம்மாதம் 22ம் தேதி விஜய் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை மிகப் பிரம்மாண்டமான முறையில் கொண்டாட தவெக சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வரும் ஜூன் 18ம் தேதி சென்னை பனையூரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விஜய்யின் பிறந்த நாளை எப்படி கொண்டாடுவது, 2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரஃபா எல்லையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்!