சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு தனது கட்சியை தொடங்கியுள்ள விஜய்க்கு, பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளுக்கான உறுதிமொழி ஏற்புப் படிவம் வெளியிடப்பட்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் வழங்கியப் பின்னர், தவெக கட்சியின் கொடி, சின்னம் உள்ளிட்டவைகள் குறித்த அறிவிப்புகளையும் வெளியிடப்படும் என நடிகரும் அக்கட்சியின் நிறுவனத் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். உறுப்பினர் சேர்க்கை அடிப்படையில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை பணி விரைவில் நடைபெறவுள்ளது என்றும், இந்த உறுப்பினர் சேர்க்கை பணிகள் முடிந்தவுடன் மட்டுமே பொறுப்பாளர்கள் நியமனம் பணி நடைபெறவுள்ளது என நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே உள்ள விஜய் மக்கள் இயக்கத்தில் பொறுப்புகளில் இருந்தாலும், அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நபர்களுக்கு மட்டுமே பொறுப்புகள் வழங்குவதில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், உறுப்பினர் சேர்க்கை பணிகளுக்கு செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயலியை அடுத்த வாரத்திற்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், இந்த செயலியில் ஒவ்வொருவரும் தங்களுக்கு வழங்கப்படும் எண்ணை வைத்து உறுப்பினர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு பகுதியிலும் யார் அதிக உறுப்பினர்களை சேர்கிறார்களோ அதன் அடிப்படையில் பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே உறுப்பினர் தமிழக வெற்றிக் கழக கட்சியின் உறுப்பினர் சேர்க்கையின் அடிப்படையில் பொறுப்புகள் கொடுக்கப்பட்டால், மூத்த உறுப்பினர்கள் நிலை என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுகிறது. இது குறித்து தெளிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டத்தை யாரோ தூண்டி விடுகிறார்கள்..! ஜி.கே வாசன் கருத்து!