தேனி: இமானுவேல் சேகரனின் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு, தேனியில் அவரது உருவ படத்திற்கு திமுக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், ஃபார்வர்டு பிளாக் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் பாலா கூறுகையில், "இமானுவேல் சேகரனின் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். மேலும், தேனி மாவட்ட மையப்பகுதியில் இமானுவேல் சேகரனின் வெண்கல சிலை நிறுவ வேண்டும் என இந்நேரத்தில் கோரிக்கை வைக்கிறோம்.
தேனி மாவட்டத்தில் மிகப் பெரும்பாண்மையாக தேவந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தோர் வசித்து வருகிறோம். தமிழின வேந்தர் கடந்த 40 ஆண்டுகளாக தேவேந்திர குல வேளாளர்களை எஸ்சி பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டுமென கோரிக்கை வைக்கிறார். ஆனால், இந்த கோரிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை.
இதையும் படிங்க : மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறு பேச்சு; மகாவிஷ்ணுவுக்கு மூன்று நாட்கள் போலீஸ் காவல்! - mahavishnu issue
தமிழன வேந்தரின் கோரிக்கையை ஏற்று எஸ்சி பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளரை வெளியேற்ற வேண்டும். இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவித்தை போல, குருபூஜையை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறோம். இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதை காலம் தாழ்த்தாமல் செய்து கொடுத்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும்" என தெரிவித்தார்.
பின்னர் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக, தேனி மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்ட கார்களில் கோஷங்களை எழுப்பியவாறு புறப்பட்டுச் சென்றனர்.