சென்னை: அருணாச்சல பிரதேசத்தில், சீனா ஆக்கிரமிப்பு செய்வதை கண்டு கொள்ளாமல், கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுப்பது என்பது பாஜகவின் அரசியல் யுத்தி என இன்று (ஏப்.02) பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வேட்பாளர் பட்டியல் அறிவித்ததை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடும் நிலையில், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள சத்தியவாணி நகர் பகுதியில் இன்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஆட்டோவில் வாக்கு சேகரிக்கச் சென்று வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும் மலர்களை தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், “நாடாளுமன்றத்தில் தமிழகப் பிரச்னை குறித்து பேசியபோது, அதிமுகவும் பாஜகவும் கண் காதுகளை மூடிக்கொண்டு வீட்டில் அமர்ந்திருப்பார்கள். நாடாளுமன்ற நிதி ரூ.12 அரை கோடி தொகையை பிரதமர் எடுத்துக் கொண்ட நிலையில், ஒரு வருடத்திற்கான தொகையை போராடி வாங்கியுள்ளோம்.
சீனா, அருணாச்சல பிரதேசத்தில் ஆக்கிரமிப்பு செய்வதை கண்டு கொள்ளாமல் கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுப்பது பாஜகவின் அரசியல் யுத்தி. சென்னையின் பிரதான இடங்களில் மழை காலங்களில் போது மழை நீர் வடிந்தது என்பது, திமுகவின் போர்க்காலப் பணிதான். வெள்ளத்தின் போது தமிழகம் வராத பிரதமர், இப்போதுதான் வெயிலை அதிகமாக நேசிக்கிறார் போல, அதுவும் அரசியலுக்காக தான்.
திமுக பெண்களுக்காக கொடுத்த திட்டத்தின் வரவேற்பாகவே பிரச்சாரம் அமைந்திருக்கிறது. குஜராத் மீனவர்கள், இந்திய மீனவர்கள், ராமேஸ்வரம் மீனவர்கள் பாதிக்கப்பட்டால் தமிழக மீனவர்கள் என நாடாளுமன்றத்தில் நான் கேட்டுள்ளேன்.