தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, ரூ.17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் துவங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது, "தேசத்தின் முக்கியமான கலங்கரை விளக்கங்களை சுற்றுலா இடங்களாக மேம்படுத்த முடியும் என மனதின் குரல் நிகழ்ச்சியில் நான் ஒருமுறை கூறினேன்.
அதன்படி, பல்வேறு மாநிலங்களில் இருக்கும் 75 கலங்கரை விளக்கங்களில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா வசதிகளை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் பெரும் பெயர் எனக்கு இன்று கிடைத்துள்ளது. இனி வரும் காலங்களில், இவை தேசத்தின் பெரிய சுற்றுலா மையமாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
கடல் வாணிபத் துறையோடு, கூடவே பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளும் துவங்கப்பட்டுள்ளன. ரயில் வழிகளின் மின்மயமாக்கலும், இரட்டை வழி ரயில் பாதைக்கான பணிகளும் தென்தமிழ்நாடு மற்றும் கேரளத்திற்கு இடையேயான இணைப்பை மேலும் சிறப்பானதாக ஆக்கும். இதனால் திருநெல்வேலி, நாகர்கோவில் மீது படியும் தாக்கமும், அழுத்தமும் குறையும்.
தமிழ்நாட்டின் சாலை வழிக் கட்டமைப்பை மேலும் நவீனமயமாக்க ரூ.4,500 கோடி செலவில், 4 பெரிய திட்டங்களையும் நான் மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இவற்றால் மாநிலத்தின் சாலை வழி இணைப்புகள் மேலும் சிறப்பாகும். பயண நேரம் குறைக்கப்படும். சுற்றுலாவுக்கும், தொழில்களுக்கும் உந்து சக்தி உண்டாகும். மத்திய அரசின் முயற்சியால், தமிழ்நாடு இன்று புதிய உயரத்தை எட்டி இருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் 1,300 கிமீ நீளம் ரயில் கட்டமைப்பு செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது. 2,000 கி.மீ அளவிலான ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வசதி பாதுகாப்பிற்காக பல நூற்றுக்கணக்கான மேம்பாலங்களும், சுரங்கப்பாதைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
ரயில் நிலையங்கள் நவீன வசதிகளால் இழைக்கப்பட்டுள்ளன. உலகத்தரம் வாய்ந்த அனுபவத்தைப் பெற்றிட, தமிழ்நாட்டில் 5 வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. சாலை கட்டமைப்பில் கூட மத்திய அரசு தமிழ்நாட்டில் கிட்டதட்ட ஒன்றரை கோடி மூதலீடுகளை செய்து வருகிறது. இதன் விளைவாகத்தான், கடந்த 10 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளின் வலைப்பின்னல் வேகமாக அதிகரித்துள்ளது” என்று பேசினார்.
இதையும் படிங்க: அரசு பள்ளிகளில் மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு