சென்னை: திராவிட இயக்கங்கள் தமிழ்நாட்டில் ஆலமரம் போல் வேரூன்றியதற்கும், அரை நூற்றாண்டுக்கும் மேலாக தேசிய கட்சிகள் மாநில ஆட்சிக்கு வந்து விடாமல் இருப்பதற்கும் மொழிப்போர் போராட்டங்களே மிக முக்கிய காரணம்.
முதல் மொழிப்போர் போராட்டம்
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே, இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் தமிழ்நாட்டில் நடந்தது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு நடுவே, இந்தி மொழிக்கு எதிராக போராட்ட களம் கண்டவர்கள் தமிழர்கள். 1937-ம் ஆண்டு ஜூலை 14-ந் தேதி சென்னை மாகாண முதல்வராக முதன்முறையாக அரியணையில் ஏறிய ராஜாஜி, இந்தி மொழிக்கு ஆதரவாக வெளியிட்ட ஒரு உத்தரவு அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சென்னை மாகாணத்தில் இருந்த 125 பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கி 1938-ம் ஆண்டு ராஜாஜி உத்தரவிட்டார். ராஜாஜியின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து இந்தி திணிப்புக்கு எதிராக முதன்முறையாக போராட்டங்களை முன்னெடுத்தன. இந்த போராட்டங்களில் பெரியாரோடு சேர்ந்து கலந்து கொண்டார் அறிஞர் அண்ணா. 1938-ம் ஆண்டு ஜூன் மாதம் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணா ஆற்றிய உரை, இளைஞர்களை கிளர்ந்தெழச் செய்தது.
இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக 2 முறை கைது செய்யப்பட்ட அண்ணா, சுமார் 13 மாதங்கள் சிறையில் இருந்தார். திராவிட இயக்கங்கள் இதனை முதல் மொழிப்போர் என்று குறிப்பிடுகின்றன. இதில் பெரியார் 19 மாதங்கள் சிறை வாசம் அனுபவித்தார். இந்தி எதிர்ப்பு போராட்ட களத்தில் தமிழ் மொழிக்காக முதல் உயிர் தியாகமும் இந்த காலக்கட்டத்தில் தான் நிகழ்ந்தது. சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்ற நடராஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மன்னிப்புக் கோரினால் விடுதலை என அரசு கூறியது. ஆனால் தமிழுக்காக உயிர் துறக்கவும் தயார் என நடராஜன், அரசின் நிபந்தனையை ஏற்கவில்லை. பல்வேறு கொடுமைகளுக்கிடையே 1939-ம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதி சிறையிலேயே உயிரிழந்தார் நடராஜன்.

இதே போல், சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்துவும் அதே ஆண்டு மார்ச் மாதம் 12-ம் தேதி உயிரிழந்தார். நடராஜன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் உயிர் தியாகத்தால் சென்னை மாகாணத்தில் தீவிரமடைந்தது இந்தி எதிர்ப்புப் போராட்டம். இதனையடுத்து இந்தியை கட்டாயப் பாடமாக்கிய அரசாணையை 1940ம் ஆண்டு திரும்பப் பெற்றது ராஜாஜி அரசு.
சுதந்திரத்திற்குப் பின் முதல் போராட்டம்
1948-ம் ஆண்டு சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் வெளியிட்ட உத்தரவு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு மீண்டும் வழி வகுத்தது. மாநிலம் முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதற்கு அறிஞர் அண்ணா தலைமை தாங்கினார். அப்போது கருணாநிதியும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்று இந்தி திணிப்புக்கு எதிராக முழக்கமிட்டார். அப்போது நாட்டின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கு எதிராக கறுப்புக் கொடியும் காட்டப்பட்டது.
இந்தி எதிர்ப்பில் இணைந்து பயணித்த திக - திமுக

1949-ம் ஆண்டு பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுகவை நிறுவினார் அண்ணா. எனினும் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில், திமுகவும், திராவிடர் கழகமும் இணைந்தே பயணித்தன. 1952-ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களின் பெயர் பலகைகளில் இந்திக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து இந்தி எழுத்துக்களை தார்ப்பூசி அழிக்கும் போராட்டத்தில் திமுகவும், திராவிடர் கழகழும் இணைந்து களம் கண்டன. பெரியார், அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன் உள்ளிட்ட தலைவர்களின் தலைமையில் மாநிலம் முழுவதும் நடந்த போராட்டங்களின் போது பெரும்பாலான ரயில் நிலையங்களின் பெயர் பலகைகளில் இடம் பெற்றிருந்த இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டன.
போராட்டங்களை ஒடுக்க வந்த ராணுவம்
1965-ம் ஆண்டில் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டக் களம் மிகவும் தீவிரமாக இருந்தது. காரணம் 1963-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த ஆட்சி மொழி மசோதா. இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவைக் கண்டித்து 1964-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரைச் சேர்ந்த சின்னச்சாமி என்ற திமுக தொண்டர் தீக்குளித்தார். திருச்சி ரயில் நிலையம் எதிரே நடந்த இந்த சம்பவம், இந்தி எதிர்ப்பை மக்கள் போராட்டமாக மாற்றியது. சின்னச்சாமியின் முதலாவது நினைவு நாள் அன்று, தமிழ்நாட்டில் பெரும் கிளர்ச்சியாக இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடித்தது. மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்கள் உக்கிரம் அடைந்தன. அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் ஆவேசமான பேச்சுக்கள் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தின.
போலீஸ் மற்றும் ராணுவம் துப்பாக்கிச் சூடு
அப்போது திமுக மாணவர் அணியில் இருந்த எல்.கணேசன், துரைமுருகன், வைகோ, பெ.சீனிவாசன் உள்ளிட்டோர் போராட்டங்களை பின் நின்று வெற்றிகரமாக நடத்தினர். அப்போது, சென்னையில் சிவலிங்கம், அரங்கநாதன், புதுக்கோட்டை கீரனூரில் முத்து என அடுத்தடுத்து பலர் தங்கள் உயிரை மாய்துக் கொண்டது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது. ஒரு கட்டத்தில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் வரவழைக்கப்பட்டது. போலீசார் மற்றும் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூட்டில் ஏராளமான இளைஞர்கள் உயிரிழந்தனர். நிலைமை மேலும் மோசமடையவே, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்தார் அண்ணா.
ராஜிநாமா செய்த மத்திய அமைச்சர்கள்
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கும் வகையில், அப்போது மத்திய அமைச்சர்களாக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.சுப்பிரமணியம், அழகேசன் ஆகியோர் ராஜிநாமா செய்தனர். மத்திய அரசுக்கு நெருக்கடி முற்றிய நிலையில், லால்பதூர் சாஸ்திரி தலைமையிலான காங்கிரஸ் அரசு, இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக தொடரும் என அறிவித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
காங்கிரஸை விரட்டிய இந்தி எதிர்ப்பு உணர்வு
தமிழ்நாட்டில் நிலவிய இந்தி எதிர்ப்பு உணர்வு, மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுக்கு முடிவுரை எழுதியது. 1967-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 179 இடங்களில் வெற்றி வாகை சூடியது. அண்ணா தலைமையில் முதன்முறையாக திமுக ஆட்சி அமைத்தது.
கல்லக்குடி கொண்ட கருணாநிதி
அண்ணா மறைவுக்குப் பின் திமுக தலைவரான கருணாநிதி, இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே வந்தார். முன்னதாக 1953-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு கருணாநிதி தலைமை வகித்தார். இந்த போராட்டம் கல்லக்குடி கொண்ட கருணாநிதி என்ற பெயரை அவருக்கு பெற்றுத் தந்தது. மேலும், கல்லக்குடி போராட்டம் திமுக முன்னணி தலைவர்கள் வரிசையில் கருணாநிதிக்கு முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் போராட்டக்காரர்களில் 2 பேர் உயிரிழந்தனர்.

1986ம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது, மத்திய அரசு அலுவலகங்களில் தகவல் தொடர்பு இனி இந்தியில் தான் இருக்கும் என்ற அறிவிப்பு வந்த போது அதனை வன்மையாக கண்டித்தார் கருணாநிதி. இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாநாட்டை திமுகவின் சார்பில் நடத்தினார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மு.க.ஸ்டாலின்
திமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் அந்த காலத்தில் அக் கட்சியின் இளைஞரணிச் செயலாளராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. அறிஞர் அண்ணா முதல் தற்போது திமுக கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்தும் மு.க.ஸ்டாலின் வரை இந்தி எதிர்ப்பு என்பது அக்கட்சியின் வளர்ச்சிப் பயணத்தில் மிக முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி கட்சிகள், மாணவர்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.