சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவால் இன்று (டிச.14) காலமானார். உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 11ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலை காலமானார்.
மேலும், இளங்கோவன் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை நந்தம்பாக்கம் அருகில், அவர் வாழ்ந்த மணப்பாக்கம் வீட்டில் இன்று (டிச.14) பிற்பகல் 2.00 மணி முதல் வைக்கப்படும். நாளை (15.12.2024) ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 4.00 மணியளவில் முகலிவாக்கம் எல் & டி காலனி பகுதியில் அமைந்துள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவரது மரணத்துக்கு தமிழக முதல்வர், ஆளுநர் மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்
''தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்தின் தோழர்களுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்'' என தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ரவி
''ஈரோடு (கிழக்கு) தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவால் ஆழ்ந்த துயரம் அடைந்தேன். மக்கள் சமூகத்துக்காகவும், அவர்களின் நலனுக்காகவும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்றென்றும் நினைவுகூரப்படும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய்
'' மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்'' என தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் எம்பி
''ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு பெருந்துயரத்தை அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் என்மீது மிகுந்த பற்றுதலைக் கொண்டிருந்தவர். அவ்வப்போது தொடர்பு கொண்டு என்னை ஊக்கப்படுத்தியவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர். அவருடைய மறைவு தமிழக அரசியல் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் யாவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
'' தமது இளமைப் பருவம் முதல் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து தனித்துவமிக்க இயக்கமாக காங்கிரஸ் கட்சியை மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. இவர் தலைவராக செயலாற்றிய போது, அன்றைய ஆட்சியாளர்களை எதிர்த்து குரல் கொடுத்து அரசியல் பேராண்மையோடு பணியாற்றி காங்கிரஸ் கட்சிக்கு வலிமை சேர்த்தவர். தனது கருத்துகளை பொதுவெளியில் துணிச்சலாக கூறக் கூடியவர். தமிழக காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாமல், தமிழக மக்களின் பேரன்போடு, அனைத்து அரசியல் கட்சியினரின் நன்மதிப்பையும், ஆதரவையும் பெற்றவர்.
தந்தை பெரியாரின் பேரன் என்பதோடு, தமிழக காங்கிரசில் முக்கிய தலைவராக இருந்த சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத்தின் மகன் என்ற பெருமை ஈ.வெ.கி.ச. இளங்கோவனுக்கு உண்டு. இந்த பாரம்பரியத்தில் வந்த அவர், சமீபத்தில் ஈரோடு கிழக்கு, சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். தமிழக காங்கிரஸ் தொண்டர்களால் தன்மானத் தலைவர் என்று அன்போடு அழைக்கப்பட்ட ஈ.வெ.கி.ச. இளங்கோவன் இழப்பு என்பது காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தமிழக காங்கிரசின் ஒரு தூண் சாய்ந்து விட்ட உணர்வோடு மிகுந்த வேதனையில் இருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
''தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான E.V.K.S. இளங்கோவன் , உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
''நாடாளுமன்ற உறுப்பினர் - மேனாள் ஒன்றிய இணையமைச்சர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் செவ்வனே செயலாற்றிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுற்றார் என்ற செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
'' ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத பங்களிப்பு செய்த தலைவர்களின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் ஒருவர். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், செயல் தலைவர் என ஏற்றுக் கொண்ட பொறுப்புகள் அனைத்தையும் திறம்பட வகித்தவர். மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நான் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த போது பல்வேறு துறைகளின் இணை அமைச்சராக பணியாற்றியவர் இளங்கோவன் . என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர். ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த அவர், நலம் பெற்று வீடு திரும்புவார் என எதிர்பார்த்திருந்த வேளையில் அவரது மறைவுச் செய்தி மனதை வாட்டுகிறது. அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், அவரது குடும்பத்திற்கும் பேரிழப்பாகும்'' என தெரிவித்துள்ளார்.