சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரபலங்கள் மற்றும் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பலர் தங்கள் வாக்குகளை காலை முதலே செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடிக்கு வருகை தந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
கட்சி தலைவர் என்ற பொறுப்பை ஏற்ற பிறகு அவர் அளிக்கும் முதல் வாக்கு இது என்பதால், அவரின் வாக்கு மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அரதியலுக்கு வந்த பிறகு இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ள விஜய் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களை மட்டும் முடித்துக்கொடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இன்னலையில் ரஷ்யாவில் Goat படத்தின் படப்பிடிப்பு பணியில் இருந்த நடிகர் விஜய் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காக அங்கிருந்து புறப்பட்டு இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் பிற்பகல் 12 மணியளவில் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் வாக்குச் சாவடிக்கு வந்த நடிகர் விஜய், கூட்ட நெரிசலுக்கு இடையே வாக்குச் சாவடிக்குள் நுழைந்து தனது வாக்கினை செலுத்தினார். அதனை தொடர்ந்து அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் எக்ஸ் தளப் பக்கத்தில், விஜய் வெளியிட்டுள்ள பதிவில், “நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜனநாயகக்கடமையை நிறைவேற்றிய நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்.! - Tamil Nadu Lok Sabha Election 2024