கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் பகுதியில் கள்ளசாராயம் குடித்த 80க்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிகிச்சை பலனின்றி இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பல அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களின் இரங்கல்கலையும், கண்டனங்களையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே ஊரில் வெவ்வேறு தெருக்களைச் சார்ந்தவர்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் அவர்களை ஒரே இடத்தில் தகனம் செய்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கருணாபுரம் காலனிக்கு பின்புறம் உள்ள இடுகாட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை மொத்தமாக தகனம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.இந்த நிலையில், அங்கு இன்று மாலை முதல் மழை பெய்து வருவதால் தகனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 38 பேரின் உடல்களை ஒரே இடத்தில் தகனம் செய்யும் பணிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள் திக்கு தெரியாத நிலையில் தங்கள் தந்தை, தாத்தா, கணவர், அண்ணன் என குடும்ப உறவுகளை இழந்து தவிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் அழுகுரல் காண்போரின் நெஞ்சை பிசைய செய்துள்ளது.
இதனிடையே, தமிழக விளையாட்டு மட்டும் இளைஞர் நலம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்று இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 38 ஆக உயர்வு.. 20 பேருக்கு தீவிர சிகிச்சை!