சென்னை: குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டிலிருந்து வந்தவரின் உடல்நிலை சீராக உள்ளது என சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நோயாளிகளின் வசதிக்கான சேவைகளை இன்று தொடங்கி வைத்த அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்,"வடசென்னை மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மருத்துவ கட்டமைப்புகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு புதிய திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு பணிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
ட்ரக் இன்பர்மேஷன் சென்டர்: இந்தியாவில் முதல் முறையாக அரசு மருத்துவமனைகளில் ட்ரக் இன்பர்மேஷன் சென்டர் என்கின்ற மருந்து தகவல் மையம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ட்ரக் இன்பர்மேஷன் சென்டரின் மூலம் ஒவ்வொரு மருந்தையும் எப்படி உட்கொள்வது? எந்த அளவு உட்கொள்வது? என்னென்ன நோய்களுக்கு என்னென்ன மாதிரியான மருந்துகளை உட்கொள்வது? போன்ற விஷயங்களை நோயாளிகளுக்கு அறிவிப்பதற்கும் தெரிந்து கொள்வதற்கு உருவாக்கப்பட்டிருக்கிறது.
முழு உடல் பரிசோதனை: வடசென்னை பொறுத்தவரை தொழிலாளர்கள் மிகுந்து இருக்கக்கூடிய பகுதி என்பதால் முழு உடல் பரிசோதனை திட்டம் ஆயிரம் ரூபாய்க்கு தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. மாணவர்களிடையே நல்ல ஒழுக்கத்தை உருவாக்குகின்ற வகையில் மாணவர்களிடையே தமிழ் பற்றை உருவாக்குகிற வகையில் தமிழ் மன்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் குரங்கம்மை?: குரங்கம்மை பாதிப்பு குறித்து மத்திய அரசு சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. குரங்கம்மை பாதிப்புக்கு உள்ளான ஒருவர் கண்டறியப்பட்டு, அவர் வெளிநாட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆய்வு செய்த பிறகு குரங்கம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தகவல் கிடைத்தவுடன் மத்திய அரசை தொடர்பு எந்த மருத்துவமனைக்கு வந்தார் எந்த நாட்டில் இருந்து வந்தார் என கேட்டப்போது,இந்த விபரம் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறினர். ஆனால் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர் நல்ல நிலையில் இருக்கிறார்.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கம்மைக்கான கண்காணிப்பு பணிகள் தொடர்ச்சியாக, தனிமைப்படுத்துகிற அறையும் மருத்துவமனை ஒன்றும் தயார் நிலையில் இருக்கிறது. எல்லா விமான நிலையங்களிலும் குரங்கம்மை எப்படி இருக்கும் மருத்துவர்கள் எப்படி அணுக வேண்டும் என்ற விழிப்புணர்வு பதாகைகளும் டிஜிட்டல் பதாகைகளிலும் தகவல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
டெங்கு பாதிப்பு நிலவரம்: டெங்கு பருவமழையின் போது பரவக்கூடியது. மக்களிடையே பொதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெங்குவின் வீரியம் ஆண்டுக்கு ஆண்டு கூடுகிறது.இருப்பினும் அரசின் நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டு கட்டுக்குள் வைக்கப்பட்டது. இவ்வாண்டு 5 மரணங்கள் ஏற்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் தான் இதில் டெங்கு பாதிப்பால் உயிரிழக்கின்றனர்" என்றார்.