சென்னை: தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் எனச் சட்டப்பேரவையில் கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு மூன்று கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இந்த விமான நிலையம் அமைய உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். ஓசூரில் தற்போதுள்ள தனியார் விமான ஓடுதளம் உள்ளிட்ட 5 இடங்களைத் தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.
இதனிடையே, ஓசூர் விமான நிலைய அமைவிடம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அண்மையில் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அதன் அடிப்படையில், விமான நிலையம் அமைக்கச் சாத்திய கூறுகள் உள்ள 5 இடங்கள் மற்றும் விமானங்கள் புறப்பாடு, தரையிறக்கம் உள்ளிட்ட தொழில்நுட்ப ஆய்வுகளைத் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (TIDCO) மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளது. இந்த 5 இடங்களின் பட்டியல் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சிக் கழக வட்டாரங்கள் ஈடிவி பாரத்திடம் தெரிவித்தன. இந்திய விமான நிலைய ஆணையம் வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓசூரின் முக்கியத்துவம்: கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூருவுக்கு அருகாமையில் இரட்டை நகரம் போல அமைந்துள்ளது ஒசூர் நகரம். மோசமான போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்ற பெங்களூருவில் கம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் நகரின் வடமேற்குப் புறத்தில் அமைந்துள்ளது. ஆனால் நகரின் தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமான எலக்ட்ரானிக் சிட்டி போன்றவை நகரின் தெற்குப் பகுதியில் தமிழ்நாடு எல்லையை ஒட்டி அமைந்துள்ளன. பெங்களூருவுக்கு இணையாக பல நிறுவனங்களின் தொழிற்சாலைகள் ஓசூரிலும் அமைந்துள்ளன. பெங்களூருவின் நெரிசலிலிருந்து ஒதுங்கியிருக்க விரும்புவோர் ஓசூரில் தங்கள் வீடுகளை தேர்ந்தெடுக்கின்றனர். பூகோள ரீதியாக முக்கியத்துவம் பெற்ற நகரமாக ஓசூர் வளர்ந்து வரும் நிலையில், இங்கு விமான நிலையத்தை நிறுவ தமிழ்நாடு அரசு ஆசைப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
என்ன சொல்கிறார்கள் கர்நாடக மக்கள்: கர்நாடகாவைப் பொறுத்தவரையிலும் மனிதவளம், போக்குவரத்து என அனைத்து விதத்திலும் பெங்களூருவின் வளர்ச்சிக்கு ஓசூரும் இன்றியமையாதது. பெங்களூரு மெட்ரோ ரயில்சேவையின் மஞ்சள் லைனை (Yellow line) ஓசூர் வரையிலும் நீட்டிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. பெங்களூருவின் தெற்கில் பொம்மசந்திராவிலிருந்து (Bommasandra ) ஓசூரை இணைக்கும் வகையில், மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பதற்கான ஆய்வுப் பணிகளும் (feasibility study) நடந்து வருகின்றது. இது தவிர கர்நாடக மாநில டிராவல் ஆபரேடர் சங்கமும் (The Karnataka State Travel Operators’ Association (KSTOA) ஓசூர் விமான நிலையத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
தடையாக இருக்கும் ஒப்பந்தம்: பொதுமக்களுக்கும், தொழில்முனைவோருக்கும் விருப்பத்திற்குரிய திட்டமாக ஒசூர் சர்வதேச விமான நிலையம் இருந்தாலும் கூட, பெங்களூரு விமான நிலைய நிறுவனத்துடன் (Bangalore International Airport Ltd (BIAL) மத்திய அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் இத்திட்டத்திற்கு தடையாக உள்ளது. ஒவ்வொரு கிரீன்பீல்டு விமான நிலையங்கள் அமைக்கப்படும் போதும் இத்தகைய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். இதன்படி பெங்களூரு விமான நிலையத்திலிருந்து 150 கிலோ மீட்டர் வான்வழி தொலைவில் (Ariel Distance) எந்த விமான நிலையமும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு புதிதாக நிறுவ முடியாது.
தளர்வுக்கு வாய்ப்பு உள்ளதா?: ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தாலும், வளர்ச்சி என்ற அடிப்படையில் சில தளர்வுகளை ஏற்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என குறிப்பிடுகின்றனர் தமிழ்நாடு அரசின் தொழில்துறை அதிகாரிகள். உதாரணத்திற்கு டெல்லி சர்வதேச விமான நிலையம் (Indira Gandhi International Airport ) செயல்பாட்டில் இருக்கும் போதே, நொய்டாவில் கிரீன்பீல்டு விமானநிலையம் அமைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டுகின்றனர் ( Jewar International Airport). இந்த இருவிமான நிலையங்களிடையே வான்வெளி தொலைவு (Ariel Distance) 72 கிலோ மீட்டர் தான். மாறாக தற்போது பெங்களூரு சர்வதேச விமானநிலையத்திற்கும், ஓசூரில் பரிந்துரைக்கப்பட்ட இடத்திற்கும் இடையே 74 கிலோ மீட்டர் தூரம் உள்ளதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதனிடையே நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று (26.07.2024) ஓசூர் விமான நிலையம் தொடர்பாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, ஒசூர் விமான நிலையம் தொடர்பாக சைட் கிளியரன்ஸ்-க்காக தமிழ்நாடு அரசிடமிருந்து எந்த பரிந்துரையும் மத்திய அரசுக்கு வரவில்லை என கூறினார். இந்நிலையில் இதற்கான பூர்வாங்க பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. ஓசூரில் விமானப் பாதையை தன் வசம் வைத்திருக்கும் தனேஜா ஏரோ ஸ்பேஸ் மற்றும் ஏவியேஷன் லிமிட்ட் உள்ளிட்ட பல்வேறு பங்கு தாரர்களுடன் தமிழ்நாடு அரசு பூர்வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: இனி பெருங்களத்தூரில் டிராபிக் கிடையாது.. மேம்பாலம் பணிகளின் தற்போதைய நிலை என்ன?