சென்னை: இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் (மே 5) நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வினை எழுதி விட்டு வந்த மாணவர்கள் கூறும்போது இயற்பியல் தேர்வு வினாக்கள் சற்று கடினமாக இருந்தாக தெரிவித்தனர். மேலும், உயிரியல் மற்றும் விலங்கியல் பாடத்தில் இருந்து கேள்விகள் எளிதாக இருந்ததாகவும் கூறி இருந்தனர்.
நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 180 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். ஆனால் கரோனா தொற்றுக்குப் பின்னர் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடத்திலும் 5 கேள்விகள் கூடுதலாகக் கேட்கப்பட்டு, 200 கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நீட் தேர்வினை தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் 3647 மாணவர்களும், 9094 மாணவிகளும் என மொத்தமாக 12,730 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.
இந்த சூழலில், நீட் தேர்வில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து இடம்பெற்ற கேள்விகள் குறித்தும், எவ்வாறு இருந்தது என்பதையும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் நீட் தேர்வுக்கு பயிற்சி வழங்கிய ஆசிரியர்கள் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்னவென்றால், "நீட் தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 160 கேள்விகள் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் இருந்து இடம் பெற்றிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
இயற்பியல்: இயற்பியல் பாடத்தில் இருந்து 50க்கு 46 கேள்விகள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் 26 கேள்விகள் எளிதாகவும், 11 கேள்விகள் சற்று சிந்தித்து எழுதும் வகையிலும், 13 கேள்விகள் மிகவும் கடினமாகவும் இருந்துள்ளது.
வேதியியல்: வேதியியல் பாடத்தில் இருந்து 50க்கு 45 கேள்விகள் இடம் பெற்றதில், 36 கேள்விகள் எளிதாகவும், 7 கேள்விகள் சற்று சிந்தித்து எழுதும் வகையிலும், 7 கேள்விகள் மிகவும் கடினமாகவும் இருந்துள்ளது.
தாவரவியல்: தாவரவியல் பாடத்தில் இருந்து 50க்கு 33 கேள்விகள் இருந்து இடம் பெற்றிருந்தன. அவற்றில் 20 கேள்விகள் எளிதாகவும், 13 கேள்விகள் சற்று சிந்தித்து எழுதும் வகையிலும், 5 கேள்விகள் மிகவும் கடினமாகவும் இருந்துள்ளது.
விலங்கியல்: விலங்கியல் பாடத்தில் இருந்து 50க்கு 36 கேள்விகள் இடம் பெற்றிருந்த நிலையில், 20 கேள்விகள் எளிதாகவும், 16 கேள்விகள் சற்று சிந்தித்து எழுதும் வகையிலும், 5 கேள்விகள் மிகவும் கடினமாகவும் இருந்துள்ளது.
இவ்வாறு மேற்கூறியவற்றின் அடிப்படையில் ஒட்டு மொத்தமாக 200க்கு, 160 கேள்விகள் தமிழ்நாடு மாநில அரசு பாடத்திட்டத்தில் இருந்து இடம்பெற்றிருப்பதாக கல்வித் துறை தெரிவித்துள்ளது. மேலும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன" இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ''பொறியியல் படிப்பிற்கான கட்ஆப் மதிப்பெண் குறையும்'' - கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுவது என்ன?