காஞ்சிபுரம்/சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது, இந்த தொழிற்சாலையில் ஏசி, வாஷிங் மெஷின், டி.வி. உள்ளிட்ட வீட்டு உபயோக எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் சுமார் 1500 பேர் நிரந்த பணியாளர்களாக உள்ளனர்.
ஊழியர்கள் கோரிக்கை என்ன?: இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் சிஐடியுCITU) தொழிற்சங்கம் தொடங்குவதற்கு அனுமதி கேட்டு சாம்சங் நிர்வாகத்திற்குக் கடிதம் அனுப்பப்பட்டது. அதனைத் தொழிற்சாலை நிர்வாகம் மறுத்துவிட்டது. மேலும், தொழிலாளர்களுக்கு இடைக்கால சிறப்பு ஊக்கத் தொகை மாதம் ரூ.5000 உயர்த்தி வழங்க வேண்டும், 5 வழித்தடங்களில் மட்டுமே உள்ள குளிரூட்டப்பட்ட பேருந்து வசதியை 108 வழித்தடங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும், திருமணத்திற்கு மூன்று நாள் விடுப்பு; குழந்தை பிறந்தால் 5 நாள் விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துக் கடந்த செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
3 அமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை: ஊழியர்கள், தொழிற்சாலை நிர்வாகத்திற்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இருதரப்பிடமும் பேசி சுமூக தீர்வு காணும் வகையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி ராஜா ஆகியோர் கொண்ட குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட ஆறு கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இறுதியாகக் கடந்த திங்கட்கிழமை(அக்.7) அன்று தலைமைச் செயலகத்தில் சாம்சங் ஊழியர்கள், தொழிற்சாலை நிர்வாகத்தை அழைத்து அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, தொழிற்சங்கம் அமைப்பதைத் தவிர மற்ற கோரிக்கைகளை ஏற்பதாக சாம்சங் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. ஆனால், சிஐசியு அமைப்பு அதனை ஏற்கவில்லை என்பதால் போராட்டம் தொடர்கிறது.
கொட்டும் மழையிலும் போராட்டம்: சாம்சங் ஊழியர்களின் நேற்று(அக்.8) 30வது நாள் போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியபோது தொழிலாளர்கள் ஏழு பேர், சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி ஆகியோரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணைக்குப் பிறகு சொந்த ஜாமினில் விடுதலை செய்தனர். இதனால், ஊழியர்கள் ஆத்திரமடைந்தனர். இன்று காலை சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.
சிஐடியு அமைப்பு விளக்கம்: 31வது நாளாக போராட்டம் நடந்து வரும் நிலையில், சிஐடியு மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் கண்ணன் ஈடிவி பாரத்திற்கு பேசிய போது, "நேற்று இரவு சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி முத்துகுமாரை போலீசார் கைது செய்து சித்திரவதை செய்துள்ளனர். போராட்ட பந்தலில் காவல்துறை இதுவரை எந்த ஒரு தொல்லையும் செய்யவில்லை. நேற்று முன்தினம் அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு சாம்சங் நிறுவனம், தொழிலாளர்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது என பொய்யான தகவலை வெளிப்படுத்திய பிறகு தொழிலாளர்கள் பலர் போராட்ட களத்திற்கு தாங்களாகவே வந்துள்ளனர். இது சாம்சங் நிறுவனமும், தமிழ்நாடு அரசும் சொன்ன பொய். தொழிற்சங்கம் என்பது சட்ட அதிகரித்தற்கு உட்பட்டது சங்கத்தைப் பதிவு செய்ய வேண்டும் இது சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமை அந்த அடிப்படையில் சாம்சங் நிறுவனம் பேச வேண்டும்" இவ்வாறு கூறினார்.
துணை முதலமைச்சர் உதயநிதி விளக்கம்: ஆவடி அருகே நடந்த அரசு விழாவில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், "சாம்சங் நிறுவனம் ஒரு பன்னாட்டு நிறுவனம், அந்நிறுவனத்திற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. சாம்சங் தொழிலாளர்களின் ஒரு கோரிக்கையைத் தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒருமாதமாக அவர்கள் போராடி வருகிறார்கள், முதலமைச்சர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். பன்னாட்டு நிறுவனம் என்பதால் அரசியல் இயக்கம் சார்ந்த தொழிற்சங்கம் வைக்க அனுமதிக்க முடியாது என சாம்சங் தெரிவித்துள்ளது" எனத் தெரிவித்தார்.
சாம்சங் வேறு மாநிலத்திற்கு செல்கிறதா?: முன்னதாக, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சாம்சங் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நலனை கருத்தில் கொண்டு சிஐடியு சங்கத்தினர் போராட்டத்தை கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு செல்கிறதா? என கூறப்படும் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தங்கம் தென்னரசு, வேறு மாநிலத்திற்கு செல்லவில்லை, தமிழ்நாடு தொழில்நிறுவனங்களுக்கு உகந்த மாநிலமாக உள்ளது என விளக்கம் அளித்தார்.
நீதிமன்றம் போராட அனுமதி: இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டதற்கு எதிராக சிஐடியு அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாலாஜி, அருள் முருகன் அமர்வு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் சாம்சங் நிறுவன ஊழியர்கள் அமைதியான முறையில் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தலாம் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக கூட்டணி தலைவர்கள் ஆதரவு: போராட்ட களத்தில் கைது செய்யப்பட்ட தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சாம்சங் தொழிற்சாலை ஊழியர்களை திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்கபாலு ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சாம்சங் ஊழியர் போராட்டம்: சங்கத்திற்கு அங்கீகாரம் வேண்டி தொடரும் வேலைநிறுத்தம்! கைது நடவடிக்கைகள் எதற்கு?