சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து, இதுவரையில் ஆளுநரின் பதவிக் காலம் நீட்டிப்பு குறித்து, எந்த தகவலும் வரவில்லை. அதோடு தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் நியமனம் பற்றிய அறிவிப்பும் இதுவரையில் வெளிவரவில்லை. எனவே ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசிடம் இருந்து முறையான அறிவிப்பு வரும் வரையில் தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிப்பார் என்று கூறப்படுகிறது.
இதனிடையே டெல்லியில் அனைத்து மாநில ஆளுநர்கள் கூட்டம் நடக்க இருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். ஆளுநருடன் அவரது செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றனர்.
டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரையும் சந்தித்துப் பேசுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, டெல்லி சென்றிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய கல்வி அமைச்சர் ஆகியோரை சந்தித்துப் பேசினார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்க நேரம் ஒதுக்கப்படாததால் அவரை சந்திக்காமல், சென்னை திரும்பினார்.
இந்த நிலையில் இன்று டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது நான்கு நாட்கள் டெல்லி பயணத்தை முடித்துவிட்டு, வரும் நான்காம் தேதி, ஞாயிறு அன்று பகல் 12.40 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ரீல்ஸ் பிரியர்களுக்கு அரசின் அசத்தல் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!