சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்தாண்டு செப்டம்பர் 11ஆம் தேதி சென்னையில் பேசியபோது, முத்துராமலிங்க தேவர் மற்றும் அண்ணாக்கும் இடையே நடந்ததாக ஒரு நிகழ்வினை பகிர்ந்தார். அதாவது, முத்துராமலிங்க தேவர் அண்ணாவை பார்த்து '' கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கடவுள் நம்பிக்கை இருப்பவர்களை தப்பாக பேசினால் மீனாட்சி அம்மனுக்கு பாலுக்கு பதிலாக ரத்தத்தால் அபிஷேகம் பண்ண வேண்டியிருக்கும்'' என எச்சரித்ததாகவும் அதற்கு பயந்து அண்ணாவும், பி.டி.ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர் என்று அண்ணாமலை கூறினார்.
அண்ணாமலையின் இந்த பேச்சு அதிமுகவினரிடையே கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்துகொண்டே அதிமுகவின் மறைந்த மூத்த தலைவர் மீது போலி விமர்சனம் வைப்பதாக அண்ணாமலையை அதிமுகவினர் கடுமையாக சாடினர்.
மேலும், இந்த பேச்சைக் கண்டித்து சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொய்யான செய்தியை மக்களிடையே கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பிரிவுகளில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், அண்ணாமலை பேசியதற்கான பல்வேறு செய்தித்தாள் ஆதாரங்களையும் சமர்பித்திருந்தார்.
இதுதொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்த கூடிய வகையிலான பிரிவுகளின் கீழ் இந்த வழக்கை பதிய செய்ய வேண்டும் என்பதால் தமிழக அரசிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர முகாந்திரம் இருப்பதாக கருதி தமிழக அரசு அதற்கு ஒப்புதல் வழங்கி ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பரிந்துரைத்தது.
இந்நிலையில், தமிழக அரசின் பரிந்துரையை ஏற்ற ஆளுநர் பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்க தொடர ஒப்புதல் அளித்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகின. சோசியல் மீடியாவில் இதுகுறித்து விவாதங்கள் கிளம்பின. இந்த நிலையில், அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் மாளிகை எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை என்று ஆளுநர் மாளிகை 'எக்ஸ்' வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை விளக்கம்: அதில் கூறப்பட்டிருப்பதாவது; தமிழ்நாடு ஆளுநரால் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. கடைசி தேதி எப்போது?