சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், மூத்த அரசியல் தலைவருமான சீதாராம் யெச்சூரி (72) உடல்நல குறைவால் இன்று (செப்., 12) காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுவாச தொற்று பிரச்சனையால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த யெச்சூரி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், சீதாராம் யெச்சூரியின் உடல் ஆராய்ச்சி நோக்கத்துக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாகவும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு பிரதமர் மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், தமிழக ஆளுநர் ரவி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவரும், நடிகருமான விஜய், ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ரவி: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி எக்ஸ் தள பதிவில், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி மறைவால் ஆழ்ந்த வருத்தமடைந்தேன். இந்திய அரசியலில் அவர் வழங்கிய தாக்கம் நிறைந்த பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், ''இடதுசாரி இயக்கத்தின் தலைவரும், இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமையுமான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு ஆழ்ந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. சீதாராம் யெச்சூரி அச்சமற்ற தலைவராக இருந்தவர், சிறு வயதிலிருந்தே, மாணவர் தலைவராக தைரியமாக எமெர்ஜென்சிக்கு எதிராக நின்று, நீதிக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். தொழிலாளி வர்க்கம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் முற்போக்கான விழுமியங்கள் ஆகியவற்றிற்கான அவரது அர்ப்பணிப்பு எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளித்தது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல்'' என தெரிவித்துள்ளார்.
Deeply saddened to hear the news of CPI(M)'s General Secretary Comrade Thiru. #SitaramYechury’s demise. His contributions to the progressive politics will always be remembered. My heartfelt condolences to his family and followers.
— TVK Vijay (@tvkvijayhq) September 12, 2024
இதையும் படிங்க: சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!
எடப்பாடி பழனிசாமி: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி காலமானார் என்ற செய்தி கேட்டு துயருற்றேன். மாணவர் பருவம் முதலே கம்யூனிச, மார்க்சிஸக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, முதலாளித்துவ கொடுமைகளை எதிர்த்து தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டவர். இந்திய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்ற சீதாராம் யெச்சூரி மறைவு நாட்டிற்கும், தொழிலாளர் வர்க்கத்திற்கும் பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை என் சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.
விஜய்: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ''மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. முற்போக்கு அரசியலில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்'' என இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.