சென்னை: ஊட்டி மற்றும் கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களுக்கு மே 7ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை வாகனங்களில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எளிதாக வந்து செல்ல உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நாளை (மே 6) முதல் epass.tnega.org என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம். மேலும், பொதுமக்கள் ஊட்டி மற்றும் கொடைக்கானல் வந்து செல்ல எந்த தடையும் இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் கோடை காலங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இப்படி கோடை காலங்களில் அவர்களின் வருகை அதிகமாக இருப்பதைக் கவனத்தில் கொண்டு, பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்களையும் அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாகத் தெரிவித்து விண்ணப்பித்து, இ-பாஸ் பெற்று அந்த அடிப்படையில் வாகனங்களும் சுற்றுலாப் பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
கோடை விடுமுறையைக் கழிக்கவும், சுற்றிப் பார்க்கவும் வரும் சுற்றுலாப் பயணிகள் முறையான இ-பாஸ் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்களுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால், அவர்கள் பயணிக்கும் வாகனங்கள் இ-பாஸ் பதிவு செய்து பயணிக்க வேண்டும். மேலும், இ-பாஸ் பெறுவதற்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் epass.tnega.org என்ற இணைய முகவரியில் உரிய தகவல்களைத் தெரிவித்து, மே 6ஆம் தேதி காலை 6.00 மணி முதல் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.
வெளிநாட்டுப் பயணிகள் தங்களுடைய இமெயில் முகவரியைப் பயன்படுத்தி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். உள்நாட்டுப் பயணிகள் தங்களுடைய தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். அவர்கள் விண்ணப்பிக்கும் போது தானாகவே இ-பாஸ் கிடைத்துவிடும்.
மேலும், இந்த நடைமுறைகளை முறைப்படுத்தி சுற்றுலாப் பயணிகள் எளிதாக வந்து செல்ல வழிவகுக்கும். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்த நடைமுறையினை வரும் மே 7ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை பின்பற்றுவார்கள். இ-பாஸ் வழங்கும் இந்த நடவடிக்கையின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும் அச்சமும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இந்த இ-பாஸ் அனுமதி காரணமாகப் பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்ற விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் எடுப்பது எப்படி? திண்டுக்கல் ஆட்சியர் கூறுவது என்ன? - Dindigul District Collector