தஞ்சாவூர்: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் காவிரி டெல்டா சமவெளி பாசனப் பகுதிகளை பெரும் வெள்ள காலங்கள், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் கோடை காலம் உள்ளிட்ட காலத்தில் இப்பகுதி வேளாண் சாகுபடியை மேம்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டிலிருந்து தமிழகம் வந்தவர், சர் ஆர்தர் காட்டன்.
இவர் கல்லணையை சீரமைத்து, முக்கொம்பு என்ற இடத்தில் மேலணையைக் கட்டினார். அதேபோல், அணைக்கரை பகுதியில் கீழ் அணையைக் கட்டினார். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாசன வசதிகளை மேம்படுத்தினார். இந்த நிலையில், இன்று (புதன்கிழமை) சர் ஆர்தர் காட்டனின் 221வது பிறந்தநாளை அப்பகுதி விவசாயிகள் கொண்டாடினர்.
அந்த வகையில், அணைக்கரை எனப்படும் கீழணை பகுதியில் உள்ள அவரது உருவப்படத்திற்கு விவசாய சங்கத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் திரண்டு, மாலை அணிவித்து, மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். அதன் பின்னர், சர் ஆர்தர் காட்டனை புகழ்ந்து கோஷமிட்டனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு விவசாயி சங்கத்தைச் சேர்ந்த மாசிலாமணி என்பவர் கூறுகையில், "ஆங்கிலேய அரசின் அலுவலராக இருந்த போதிலும் விவசாயிகளுக்கும், வேளாண்மை சிறக்க பாடுபட்ட சர் ஆர்தர் காட்டனின் பிறந்தநாளை அரசு விழாவாக நடத்திட அரசு முன்வர வேண்டும்.
மேலும், இவர் கட்டிய அணைப் பகுதிகளில் இவரது உருவச்சிலைகளை நிறுவி, இவரது பெருமையை உலகறியச் செய்யும் வகையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். அதேபோல், இவரது பிறந்தநாளை நீர்ப்பாசன மேலாண்மை தினமாக கடைபிடிக்கவும் அரசு முன்வர வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வள்ளிமலையில் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!