சென்னை: தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளை மேற்பார்வை செய்ய, ஒன்றிய அளவில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் 810 பேர் பணியில் உள்ளனர். அவர்கள் மாதந்தோறும் பள்ளிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன், ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடு உள்ளிட்டவைகளை ''பள்ளிப் பார்வை'' எனும் ஆப் மூலம் பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் நரேஷ், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாதந்தோறும் 12 பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். ஆனால், வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்யாமல் இருப்பது கல்வி மேலாண்மை தகவல் முகமை மூலம் தெரிய வந்தது.
இதையும் படிங்க: 'விழுந்தால் கட்டிக்கொடுக்கிறோம்'.. சூளைமேட்டில் சரிந்த அப்பார்ட்மெண்ட் சுற்றுச்சுவர்.. பீதியில் குடும்பங்கள்!
அதன் அடிப்படையில், 145 வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ் விளக்கம் கேட்டு அனுப்பி உள்ள கடிதத்தில், பள்ளிகளை ஆய்வு செய்தல் மற்றும் பள்ளிகளை பார்வையிட்டு மாணவர்களின் கல்வித்திறன்களை மேம்படுத்தும் வகையில் செப்டம்பர் மாதம் குறைந்தபட்சம் 12 பள்ளிகளை பார்வையிடவும், 2 பள்ளிகளை ஆண்டாய்வு செய்யவும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிப் பார்வை மேற்காெள்ளப்பட்ட விபரங்கள் கல்வி மேலாண்மைத் தகவல் முகமை மூலம் பெறப்பட்டுள்ளது. அதில் 12க்கும் குறைவான பள்ளிகளை பல வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
பள்ளிகளை சரியாக பார்வையிடாவிட்டால் மாணவர்களின் கற்றல், அறிவு திறன் குறைய வாய்ப்புள்ளது. மாணவர்களின் நலன், பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும் , கல்வித்திறனை மேம்படுத்திடவும் பள்ளிகளில் ஆண்டாய்வு மற்றும் பள்ளி பார்வை அவசியமாகிறது. 12 பள்ளிக்கும் குறைவாக பார்வையிட்ட, 145 வட்டாரக் கல்வி அலுவலர்கள் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், அதனை தொடக்கக் கல்வி மாவட்ட அலுவலர்கள் பெற்று அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்