சென்னை: பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, "தமிழ்நாட்டில் 2022-2023 மற்றும் 2023- 2024 ஆம் கல்வியாண்டில் அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் (Smart Class Room) ஏற்படுத்திடவும் மற்றும் 2021 - 2022 , 2022 - 2023 மற்றும் 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள் (Hi Tech Lab) அமைப்பதற்கான பணிகளைத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் மேற்கொள்ள அனுமதியளித்து.
பள்ளிக் கல்வித் துறை, மின்னியம் ஆக்கப்பட்ட கற்றல் கற்பித்தல் (Digital Contem) வளங்களை தயாரித்து திறன்மிகு வகுப்பறைகள் மூலம் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இம்முன்முயற்சியானது மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை உருவாக்குவதாகவும், கற்றல் செயல்பாடுகளில் ஈடுபாட்டினை ஏற்படுத்தி மேம்பாட்டினை அடைய வைக்கக் கூடியதாகவும் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை வகுப்பறையில் சிறப்பாக செய்வதற்கு உறுதுணையாக இருக்கும்.
2024 - 2025ஆம் கல்வியாண்டில் அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் தொடங்கப்படுவதன் முதற்கட்டமாக 6 மாவட்டங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒன்றியங்களில் (EBB) உள்ள 493 பள்ளிகளில் 634 திறன்மிகு வகுப்பறைகள் நிறுவப்பட்டு உள்ளன.
ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும் ஊராட்சி ஒன்றிய நகராட்சி அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ட கம்ப்யூட்டர் ஆய்வகங்களும் 2024 - 2025ஆம் கல்வியாண்டில் இருந்து முறையாக ஏற்படுத்துவதற்கும் மற்றும் அதனை பராமரிப்பு செய்வதற்கும் அனைத்து நிலை அலுவலர்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகளும், பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு செயல்முறைகள் அளிக்கப்பட்டுள்ளது.
திறன்மிகு வகுப்பறைகளை பயன்படுத்துவதற்கான நிலையான வழிகாட்டு செயல்முறைகள்:
1.திறன்மிகு வகுப்பறையை கையாள பள்ளிக்கு ஒரு ஆசிரியரை சார்ந்த தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும்.
2.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்காக மட்டுமே திறன்மிகு வகுப்பறையை தினமும் பயன்படுத்த வேண்டும்.
3.பொறுப்பாசிரியர் இல்லாமல் திறன்மிகு வகுப்பறையை மாணவர்கள் கையாளுவதை தவிர்த்தல் வேண்டும்.
4.ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்குரிய மின்னிய பாடப் பொருள்களை திறன்மிகு வகுப்பறையை பயன்படுத்தி கற்பித்தலை திட்டமிட்டு கொள்ள வேண்டும்.
5.திறன்மிகு வகுப்பறையை பயன்படுத்தும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் முதற்கட்டமாக திறன்மிகு வகுப்பறையை பயன்படுத்துவதற்கான கால அட்டவணை ஒன்றை தயாரித்தல் வேண்டும்.
6.நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் திறன்மிகு வகுப்பறையை பயன்படுத்துவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்
7.மின்னிய பாடப்பொருட்கள் காணொலிகளாகவும் மற்றும் ஆசிரியர்களுக்கான மாணவர்களுக்கான காணொலிகளாகவும் தனித்தனியே இடம் பெற்றிருக்கும். மாணவர்களுக்கான காணொலிகள் ஒவ்வொரு கட்டகத்திற்கும் அந்தந்த நாள்களுக்கான செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு இடம் பெற்றிருக்கும்.
8.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கான ஆசிரியர் கையேட்டில் (THB ) உள்ள செயல்பாடுகளை வகுப்பறையில் செயல்படுத்தும் பொழுது அச்செயல்பாட்டிற்கு தேவையான மாணவர் காணொலிகள் இருப்பின் அதனை பயன்படுத்தி மாணவர்களுக்கு அச்செயல்பாட்டை கற்பித்தல் வேண்டும்.
திறன்மிகு வகுப்பறையில் செய்யக்கூடாதவை
1. பாதுகாப்பு காரணங்களுக்காக கம்ப்யூட்டரில் உள்ள USB Port கள் முடக்கப்பட்டு இருக்கும். பென் டிரைவ் (Pen drive) போன்ற எந்த தகவல் சேமிப்பான்களையும் எந்த Desktop சாதனங்களிலும் இணைத்தல் கூடாது.
2. பணியாளர்கள் தங்கள் சொந்த செயல்பாடுகளுக்கு கம்ப்யூட்டர் மற்றும் இண்டர்நெட் ஆகியவற்றைப் பயன்படுத்துதல் கூடாது. அனைத்து அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் பதிவுகள் CCCயிலிருந்து 24 மணி நேரமும் மானிட்டரில் பதிவு செய்யப்படும்.
3. மாணவர்கள் பிரிண்டரை பயன்படுத்த அனுமதிக்க கூடாது.
4. மின் கேபிள்கள், ஸ்பீக்கர் கேபிள்கள் மற்றும் ஹெட்போன்களை இழுக்கவோ, அகற்றவோ கூடாது.
5. அனைத்து தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் நாற்காலி, மேசைகள் போன்ற பொருட்கள் சேதமடையக் கூடாது.
6. மாணவர்களோ அல்லது ஆசிரியர்களோ எந்தவொரு உள்ளமைவையும் (configuartion) மாற்றவோ அல்லது சர்வரிலிருந்து எந்த OS உள்ளமைவு கோப்பினை நீக்கக் கூடாது.
7.CCC- ன் அனுமதியின்றி வேறு எந்த ஒஎஸ் மற்றும் சாப்ட்வேர்யும் நிறுவ முயற்சிக்கக் கூடாது.
8. தனிப்பட்ட ஹாட்ஸ்பாட், வைபை பயன்படுத்தக் கூடாது.
9.ஆய்வகத்திற்குள் எந்த உணவுப் பொருட்களையும் எடுத்து செல்லவோ அங்கு வைத்து சாப்பிடவோ அனுமதிக்கக் கூடாது.
10.ஆய்வகத்தின் பொறுப்பு ஆசிரியர் இல்லாத நிலையில் ஆய்வகங்களில் மாணவர்கள் தனியாக இருக்க அனுமதிக்கக் கூடாது.
11.கூடுதல் புத்தகங்கள், சீருடைகள், பெஞ்சுகள், மேஜைகள், நாற்காலிகள், மிதிவண்டிகள் மற்றும் பயன்படுத்தப்படாத இதரப் பொருட்களை பத்திரப்படுத்தும் இடமாக உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களைப் பயன்படுத்த கூடாது"
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.