தூத்துக்குடி: குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம், உள்நாட்டு ஹைட்ரஜன் கப்பல் உள்ளிட்ட ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடக்கி வைத்த பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பின்னர் விழா மேடையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தைத் தூத்துக்குடி எழுதி வருகிறது. புதிய திட்டங்களால் அனைவரின் முன்னேற்றம், வளர்ச்சி, அதிகரிக்கிறது. தூத்துக்குடியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் இந்தியா முழுவதும் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும், வளர்ச்சியடைந்த இந்தியாவில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்து வருகிறது. புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்" எனக் கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கான விழா மேடையில் அமர்ந்திருந்த நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தூத்துக்குடி எம்.பி.,கனிமொழி ஆகியோரது பெயரைக் கூறாமல் பிரதமர் தவிர்த்தது பேசுபொருளானது.
பின்னர் திருநெல்வேலி சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அங்கு திமுக அரசைக் கடுமையாக விமர்சனம் செய்த அவர் 2024 தேர்தலோடு திமுக காணாமல் போகும் என்றார். மேலும் திமுகவுக்குத் தேசப்பற்று இல்லை என்பதைச் சீன கொடியுடன் அவர்கள் வெளியிட்டுள்ள நாளிதழ் விளம்பரம் காட்டுவதாகவும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
அதற்குக் காரணம், தூத்துக்குடியில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி தொடர்பாக முரசொலி உள்ளிட்ட நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அந்த விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த ராக்கெட்டில் சீனா கொடியின் அடையாளம் இடம்பெற்றிருந்தது.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ்(X) பக்கத்தில், "திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று முன்னணி தமிழ் நாளிதழ்களுக்கு அளித்த இந்த விளம்பரத்தில் சீனா மீதான திமுகவின் அர்ப்பணிப்பு மற்றும் நமது நாட்டின் புறக்கணிப்பு வெளிப்படுத்துகிறது" எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்பி கனிமொழியிடம் இந்த விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அவர், "சீன அதிபர் இந்தியா வந்தபோது அவருடன் பிரதமர் மோடி நடைப்பயிற்சி சென்றார். சீனா நமது எதிரி நாடு என யாரும் அறிவிக்கவில்லை. இது தெரியாமல் நடந்த தவறு" எனப் பதில் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக இருக்காது எனக் கூறிய பலர் காணாமல் போயுள்ளனர்.. பிரதமருக்கு கனிமொழி பதிலடி!