சென்னை: 18வது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக, தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மதுரவாயல் பகுதியில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் க.கணபதி, முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரச்சாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது, "ஊழல், பாசிசம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லா மத்திய ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. வருடத்திற்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, பெட்ரோல், டீசல் விலை, இந்தியப் பொருளாதாரத்தை அமெரிக்காவிற்கு இணையாகக் கொண்டு வருவது என்று கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளைப் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடி வாக்கு கேட்க என்ன நியாயம் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் இலவச பேருந்து, பெண்கள் உரிமை தொகை, காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப் பெண் என பல திட்டங்களைக் கொண்டு வந்து 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.
15 லட்சம் கொடுப்பதாக மோடி கூறி இதுவரை எந்த பணமும் வரவில்லை. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை உதய் மின் திட்டம் கொண்டு வரப்படவில்லை. ஆனால், எடப்பாடி ஆட்சிக்கு வந்த பின்பு அந்த திட்டம் கையெழுத்தானது. பதவி பறிபோகிவிடும் என்று தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய திட்டங்களை 4 ஆண்டுகளாக பறிகொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி.
தற்போது, பிரதமர் மோடிக்கும் தங்களுக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை எனக்கூறி எடப்பாடி நாடகமாடுகிறார். அதிமுக சிறுபான்மையினருக்கு சி.ஏ.ஏ திட்டத்தைக் கொண்டு வந்து துரோகம் செய்துவிட்டு, தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறது" என்று குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: எம்.பி சீட் கிடைக்காமல் போக முயன்றவர்களுக்கு நன்றி - திருநாவுக்கரசர் - Su Thirunavukkarasar