ராணிப்பேட்டை: பனப்பாக்கம் சிப்காட்டில் அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவன வாகன உற்பத்தி ஆலைக்கு இன்று (செப்.28) காலை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தின் மூலம், 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, டிஆர்பி ராஜா, டாடா மோட்டார்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ''டாடா மோட்டார்ஸ் நிறுவன வாகன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகத்தில் டாடா தொழில் நிறுவனம் விரிவடைதால் அந்நிறுவனம் அடையும் பெருமையை போல, தமிழகத்தின் மீது டாடா வைத்திருக்கும் நம்பிக்கை நினைத்து நாங்களும் பெருமை கொள்கிறோம். இந்தியாவுடைய பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், உலகின் பெரிய நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு தான் முகவரியாக விளங்குகிறது.
தமிழ்நாட்டுக்கே பெருமை: டாடா குழும தலைவர் சந்திரசேகரன் இந்த விழாவில் பங்கேற்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. இவர் நாமக்கல் மாவட்டதை சேர்ந்தவர். உலக புகழ் பெற்ற நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் இவர் இருப்பது தமிழ்நாட்டுக்கே பெருமை. விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், அரசு பள்ளியில் படித்து இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதற்கு அவரது தன்னம்பிக்கையும், அறிவாற்றலும் தான் காரணம். இவர் இந்திய இளைஞர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இருக்கிறார்.
இதையும் படிங்க: மீண்டும் அமைச்சர் ஆகிறாரா செந்தில் பாலாஜி? - அமைச்சர் அன்பில் மகேஷ் சூசக பதில்!
பெண்களுக்கு வேலைவாய்ப்பு: டாடா நிறுவனம் தகவல் தொழில்நுட்பம், எஃகு, விமான போக்குவரத்து, ஆட்டோமொபைல், நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளில் தடம் பதித்துள்ளது. எனது கனவு திட்டமாக உள்ள 'நான் முதல்வன்' திட்டத்தில் இணைந்து டாடா நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. டாடா மூலம் பெண்களுக்கு அதிகளவு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. இதனால் அவர்களது வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளது. இந்த ஆலையின் மூலம் 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதோடு 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் அளிக்கப்படவுள்ளது.
முதல் சிப்காட்: முக்கியமான விஷயம் என்னவென்றால், 1973 ஆம் ஆண்டு கலைஞர் இதே ராணிப்பேட்டையில் தான் முதல் சிப்காட் தொடங்கினார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கடந்து இந்த மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்களை பார்ப்பதற்கு பெருமையாக உள்ளது. இந்தியாவின் வாகன உற்பத்திக்கான தலைநகரமாக தமிழ்நாடு திகழ்ந்துள்ளது.
அது மட்டுமில்லாமல், எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவன வாகன உற்பத்தி ஆலைக்கான புரிந்துனர்வு ஒப்பந்தம் இந்தாண்டு மார்ச் மாதம் தான் போடப்பட்டது. ஆறே மாதத்தில் அதற்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின் உயர்வுக்காக திராவிட மாடல் அரசு அனைத்தையும் செய்யும், அதற்கு டாடா போன்ற நிறுவனங்கள் பக்க பலமாக இருக்க வேண்டும்'' என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்