சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லை சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலியல் புகார்கள் அதிகம் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுவத்துவதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில் இன்று மதியம் 3 மணிக்கு காணொளி வாயிலாக நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பாளர்கள், ஆணையர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரிகளின் முதல்வர்கள், கல்வி அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதற்காக துறைசார்ந்த அதிகாரிகள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து காணொளிக் காட்சி மூலமாக கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் இது குறித்த தகவலை அனைத்து துறையினருக்கும் தெரிவித்து கூட்டத்தில் அனைவரும் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று உள்துறை செயலர் தீரஜ் குமார் மின்னஞ்சல் வாயிலாக ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.
இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில், முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொளி வாயிலாக கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 328 காலியிடங்கள் - மாணவர் சேர்க்கைக்குழு தகவல்!