சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைக்கான விவாதம் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கியது. அந்த வகையில், நேற்று (ஜூன் 26) நடைபெற்ற தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரையில் பேசினார்.
அதில், பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலுரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியிலே கடும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்தின்போது பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஏப்ரல் 1, 2003க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது குறித்த அரசின் கொள்கை முடிவு குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்து பேசிய நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர், பழைய ஒய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு அரசினால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு பல்வேறு பணியாளர் சங்கங்களின் கருத்துக்களைக் கேட்டிருக்கிறது. அரசு ஊழியர்-ஆசிரியர்கள் அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தி அரசிற்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
ஆசிரியர்களுக்கு கடும் ஏமாற்றம்: மேலும், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் அளித்துள்ள பல்வேறு கருத்துகளின் அடிப்படையில் ஆய்வு செய்து அளித்துள்ள அறிக்கைகளின் மீதான அரசின் கொள்கை முடிவு அரசின் பரிசீலனையில் உள்ளது என்ற தகவலைத் தெரிவித்துள்ளார். இது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மத்தியிலே கடும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான
சாத்தியக்கூறுகளை வழங்குவதற்காக 2016ல் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் சாந்தா ஷீலா நாயர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவிற்கு, பின்னர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ். ஸ்ரீதர் தலைமையேற்று அரசிற்கு2018ல் அறிக்கை அளித்தது.
செப்டம்பர் 2017ல் ஜாக்டோ ஜியோ ஏழாவது ஊதியக் குழுவினை அமல்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பிரதான கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தினை அறிவித்த போது, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2017ல் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த சாத்தியமில்லை எனத் தெரிவித்தார்.
2017ல் நடைபெற்ற காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தின் விளைவாக, ஏழாவது ஊதிய மாற்றத்தினை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தினாலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான இயக்கங்கள் தொடர்ந்தன. 2021ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற தலைப்பிட்டு, 309 எண்ணிட்ட வாக்குறுதியில் புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என அறிவித்தது.
வல்லுநர் குழு ஆய்வு வரம்புகளுக்கு எதிராக-முரணாக அறிக்கை அளிக்கப்பட்டிருந்தால், அந்த வல்லுநர் குழுவில் இடம்பெற்ற அலுவலர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில் பல்வேறு மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே, சத்தீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளன.
இந்தியாவிலேயே பொருளாதார, சமூகநீதி மற்றும் ஏனைய துறைகளில் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வரும் தமிழ்நாடு, இந்த விஷயத்தில் மட்டும் பின்னணியில் உள்ளது என்பது அதிர்ச்சியானது. ஓய்வூதியத் திட்டத்தில் இதுநாள் வரை பணியிலிருந்து ஓய்வு பெற்றோர், பணியின்போது உயிரிழந்தோர் என 38,129 பணியாளர்கள் எண்ணிக்கை உள்ளது. இவர்களுக்கு, அரசின் பங்களிப்பும் வட்டித்தொகையும் மட்டுமே 2024 வரை வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கடந்த மூன்றாண்டுகளாக ஒவ்வொரு முறையும் சட்டமன்றம் கூடும்போதும் இது தொடர்பான வினாக்களுக்கு வழங்கப்படும் பதிலானது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் தமிழ்நாடு அரசின் மீது அவநம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் நடைமுறைப்படுத்தப்பட்ட சரண் விடுப்புச் சலுகையானது, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவித நடவடிக்கையும் அரசு தரப்பில் இல்லை என்பது வேதனையிலும் வேதனையானது.
எனவே, முதலமைச்சர் தமிழ்நாடு அரசின் மீதான ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நன்மதிப்பினை மீட்டெடுக்கும் வகையில், தேர்தல் கால வாக்குறுதியான மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்கான கொள்கை முடிவினையும் சரண் விடுப்பினை மீண்டும் நடைமுறைப்டுத்துவதற்கான அறிவிப்பினையும் நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "மத்திய அரசால் இந்த வருடம் ரூ.12,000 கோடி கூடுதல் செலவு" - நிதித்துறை அதிர்ச்சி தகவல்! - TN Assembly Session 2024