திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கின்றது. அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இன்று (ஏப்.17) மாலையுடன் தேர்தல் பிரச்சாரமானது நிறைவடைகிறது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தும்பேரி, உதயேந்திரம் பேரூராட்சி, மேட்டுப்பாளையம், வாணியம்பாடி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதிக் கட்சியின் தலைவரும், வேட்பாளருமான ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், "நான் பல படங்களை இயக்கியுள்ளேன். பல ஹீரோக்களுடன் நடித்துள்ளேன். ஆனால், ரியல் ஹீரோவுக்காக இன்று தான் களத்தில் இறங்கி பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். மக்களுக்கான பல்வேறு உதவிகளைச் செய்து வருபவர் வேட்பாளர் ஏ.சி.சண்முகம்.
எதிரிகள் தப்பு செய்தால் தட்டிக் கேட்பார். இல்லாதவர்களுக்கு அள்ளிக் கொடுப்பார். பதவியில் இல்லாத போதும், மக்களுக்கு நிறைய உதவிகளைச் செய்து இருக்கிறார். மருத்துவ முகாம்களை ஏற்படுத்தி, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்தார். கிட்டத்தட்ட 6 ஆயிரம் பேருக்கு கண் ஆபரேஷன் செய்துள்ளார். வேலைவாய்ப்பு முகாம் ஏற்படுத்தி, வேலூர் பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திருக்கிறார். சொல்லாத பலவற்றை செய்துள்ளார்.
நீங்கள் வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால், உங்கள் குடும்பங்களில் நடக்கக்கூடிய ஒவ்வொரு சுப நிகழ்ச்சிகளுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்குவார். நான் 4 அரண்மனை தான் எடுத்திருக்கிறேன். ஆனால், அவர் அரண்மனை மாதிரி ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் இலவச திருமண மண்டபத்தைக் கட்டித் தர உள்ளார்” என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.
இதையும் படிங்க: "மூன்றாம் பாலினத்தவர் கணக்கெடுப்பு 3 மாதங்களில் முடிக்கப்படும்" - தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தெரிவிப்பு! - TRANSGENDER Census In Tamilnadu