ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட குக்கிராம மக்கள் உள்ளனர். இங்குள்ள பெரும்பான்மையான கிராம மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இன்னும் சிலர் காட்டுப்பகுதியில் உள்ள சிறு வனப் பொருட்களைச் சேகரித்து, அதனை விற்பனை செய்து பொருளாதாரம் ஈட்டி வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் பலருக்கும் கல்வி குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாமல் இருந்து வந்தனர். இதனையடுத்து, தமிழ்நாடு அரசு மற்றும் 'பரண்' எனக்கூடிய சமூக நலன் அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக, தற்போது இந்த கிராமத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இது அங்குள்ள கிராம மக்களிடையே ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கோடை விடுமுறையை கொண்டாத்துடன் மாணவர்கள் செலவழிக்க வேண்டும் என்பதற்காக, இலவச கோடை கால பயிற்சி முகாம் ஒன்றை ஏற்பாடு செய்ததுள்ளது பரண் அமைப்பு.
கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கிய இந்த கோடை கால பயிற்சி முகாமில் குழந்தைகள் நாடாளுமன்றம், சிலம்பம், நாடகம் நடிப்பது, மேடைப்பேச்சு மற்றும் கைவினைப் பொருட்கள் தயார் செய்வது உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.
மேலும், இந்த முகாமில் ஒவ்வொரு நாளும் கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை மாணவர்கள் மூலம் அரங்கேற்றம் செய்துள்ளனர். இந்த பயிற்சி முகாமில் கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம், அரிகியம், கோட்டமாளம், காந்திநகர், நல்லூர், போகிப்பாளையம் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் இருந்து 150 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
11 நாள்கள் கோலாகலமாகவும், மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்கள், பழங்குடியின மக்களின் இறைவணக்கம் பாடலை பாடி அசத்தினர். இதனையடுத்து பயிற்சி முகாமில் சிறப்பாக கற்றுத் தேர்ந்த மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
இது குறித்து பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் கூறுகையில், இந்த கோடை கால பயிற்சி முகாம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், இதே போல் அடுத்த ஆண்டும் தொடர்ந்து செய்ய வேண்டும் என தெரிவித்தனர். மேலும், இந்த பயிற்சி முகாம் அமைப்பதற்கு உறுதியாக இருந்த கென்னடிக்கும், பரண் அமைப்பைச் சார்ந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பிளஸ் 2 முடித்த மாணவர்கள் எந்த படிப்பில் சேரலாம்? சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடியின் வழிகாட்டுதல்கள்!