வேலூர்: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அனைத்து துறை அரசு அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஜன.27 ஆம் தேதி 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த குமரவேல் பாண்டியன் இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக சுப்புலட்சுமி ஐஏஎஸ் வேலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று காலை 10.30 மணியளவில், சுப்புலட்சுமி ஐஏஎஸ் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். மாற்றலாகி செல்லும் ஆட்சியர் குமரவேல் பாண்டியன் பூங்கொத்து கொடுத்து வரவேற்று, பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்து சிறப்பாக செயல்பட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேலூர் மாவட்ட புதிய ஆட்சியர் சுப்புலட்சுமி, "வேலூர் மாவட்டத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக, வேலூர் மாவட்ட நிர்வாகம் பாடுபடும். பத்திரிகையாளர்கள் அரசின் ஒரு அங்கம். அரசின் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" எனவும் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த சுப்புலட்சுமி, பாளையங்கோட்டையில் உள்ள இன்னேஷியஸ் கான்வென்ட்டில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். அப்போது 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வணிகவியல் பாடத்தில் 200க்கு 200 எடுத்தவர். பின்னர் சென்னையில் உள்ள எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் தனது இளங்கலை பட்டப்படிப்பை (பி.ஏ பொருளாதாரம்) முடித்தார். அதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள கோகுலே இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாலிடிக்ஸ் அண்ட் எகனாமிக்ஸ் கல்லூரியில், முதுகலைப் பட்டப்படிப்பான எம்.ஏயையும் (பொருளாதாரம்) முடித்தார்.
பின்னர் அரசுப்பணி 2009 சிவில் சர்வீஸ் தேர்வில் IAS ஆக தேர்வு பெற்று, அஸ்ஸாம் மாநிலம் ஒதுக்கப்பட்டு பயிற்சிக்குப்பின், சொந்த மாநிலத்தில் பணி புரிய விரும்பி 2009ல் தமிழ்நாட்டில் துணை ஆட்சியராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் 2018ல் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். இவர் 2009ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC Group 1) குரூப்-1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்