மதுரை: மகன் அல்லது மகள் என வாரிசு இருந்தாலும் ஆதரவற்ற விதவைக்கான சான்றிதழ் வழங்கப்படும் வகையில் ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறும் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டிருப்பதற்கு தமிழக அரசுக்கு எம்.பி சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆதரவற்ற விதவைகள் தமிழ்நாட்டில் கோட்டாட்சியர் அல்லது சார் ஆட்சியர் நிலையில் உள்ளவர்களிடம் ஆதரவற்ற விதவை என்ற சான்று பெற வேண்டும். இந்த சான்று பெறுவதற்கு விதவையாக இருப்பவர் எவ்வித துணையுமில்லாமல் வசிக்க வேண்டும் என்பது போன்ற இப்போதைய காலகட்டத்துக்கு பொருத்தமில்லாத நிபந்தனைகளை தளர்வு செய்து, ஏழை எளியவர்களுக்கு எளிதாக சான்று கிடைத்திட வழிவகை செய்யுமாறு வலியுறுத்தி எம்.பி சு.வெங்கடேசன் தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில், அவரது கோரிக்கையின் அடிப்படையில் இதற்கான விதிகளில் திருத்தம் செய்து புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதற்காக தமிழக அரசுக்கு எம்.பி சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து எம்.பி சு.வெங்கடேசன் சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறைகளில் பல பிரச்சனைகள் இருந்து வந்தன. குறிப்பாக அச்சான்றிதழ் வழங்க எவ்வித துணையுமில்லாமல் வசிக்க வேண்டும் என்பது போன்ற பொருத்தமற்ற நிபந்தனைகள் இருந்தன. இவ்வித நிபந்தனைகளில் உரிய மாற்றங்களை செய்ய வேண்டுமென்று தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
இதையும் படிங்க: விஜயின் அரசியல் வருகை குறித்து ரஜினியின் சகோதரர் சத்திய நாராயண ராவ் சொன்னது இதுதான்!
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராகேஷ் கக்காணி, எனது கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கு எவ்வித துணையுமில்லாது இருக்க வேண்டும் என்பதற்கு, மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது பொருளல்ல எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நடைமுறையில் ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவற்கு தடையாக இருந்த முக்கியமான பிரச்சனை இச்சுற்றறிக்கையின் மூலம் தீர்வு காணப்பட்டிருக்கிறது. இது ஆதரவற்ற பெண்கள் எண்ணற்றோருக்கு பெரும் பலன் தரக்கூடிய ஒன்று. எனது கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்