மதுரை: நீட் தேர்வு தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, நீட் தேர்வு ரத்து பரிசீலனையில் இல்லை என மத்திய கல்வி இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் கூறினார். மத்திய இணை அமைச்சர் அவ்வாறு கூறுவது கண்டனத்திற்குரியது என மதுரை எம்.பி. சு வெங்கடேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுவதாவது,“நாடாளுமன்றத்தில் நான் உள்ளிட்ட 31 எம்.பிக்கள் எழுப்பி இருந்த கேள்விக்கு (எண் 10/22.07.2024) ஒன்றிய கல்வி இணை அமைச்சர் முனைவர் சுகந்தா மஜூம்தார் அளித்துள்ள பதில் நழுவல், மறைத்தல், அராஜகம் என்கிற வகையில் அமைந்துள்ளது.
நீட் நிகழ்வு குறித்து தரவுகள் இல்லை: ஒன்றிய அரசு முகமைகளால் நடத்தப்படும் தேர்வுகளில் கேள்வித்தாள் கசிவு கடந்த 10 ஆண்டுகளில் நடந்திருப்பது குறித்து கேள்வியெழுப்பினோம். ஆனால் போட்டி தேர்வுகளை வெவ்வேறு அமைப்புகள் பணி நியமனங்கள்காகவும், உயர் கல்வி நிலைய அனுமதிகளுக்காகவும், நடத்தி வருவதால் அது சம்பந்தமான குறிப்பான நிகழ்வுகள் பற்றிய தரவுகளை அரசு பராமரிப்பது இல்லை என்றும் அமைச்சர் பதிலளித்துள்ளார்.
அத்தகைய தரவுகளை தங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள தேர்வு முகமைகளிடமிருந்து பெற்றுத் தர வேண்டும், என்கிற குறைந்தபட்ச அக்கறை கூட அமைச்சரின் பதிலில் வெளிப்படவில்லை. ஒருவேளை இது போன்ற தவறுகள் முறைகேடுகள் பற்றிய தரவுகளை அந்த முகமைகளை வைத்திருக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது. அமைச்சரின் இந்த பதில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள நம்பிக்கை இழப்பை மேலும் அதிகரிப்பதாகவே அமைந்திருக்கிறது.
சிபிஐ விசாணை: நீட் இளங்கலை பட்ட தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் பற்றி எழுப்பிய கேள்விக்கு குறிப்பிட்ட நிகழ்வில் தவறு நடந்திருப்பதை அமைச்சர் ஏற்றுக்கொண்டு இருக்கிறார். சிபிஐ விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அகில இந்திய அளவில் ரகசியம் மீறப்பட்டு இருப்பதற்கான தரவுகள் இல்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார். விசாரணை முடிவதற்கு கூட காத்திருக்காமல் இப்படி அமைச்சர அறிவிப்பது நியாயமானதாக இல்லை.
மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, நீட் தேர்வுகளுக்கான முகமைகளின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை, நேர்மை பற்றிய ஆய்வுக்காக உயர்மட்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதன் அறிக்கையை பற்றி முன்னேற்றங்கள் காணப்படும் என்றும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அராஜகமான பதில்!ஆனால் இந்த ஆய்வுகள் எல்லாம் முடிவதற்கு முன்பாகவே நீட் தேர்வுகள் தரம் உயர்வு, தகுதியை உறுதிப்படுத்தல், லாப வேட்டையை வணிக மையத்தை தடுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஆகவே அதை ரத்து செய்வது பற்றிய பரிசீலனை இல்லை என்றும் அமைச்சர் கூறுவது ஏன், ஏற்கனவே இதுகுறித்த உயர்மட்ட குழுவின் பரிசீலனைக்கு 37,000 ஆலோசனைகள் வந்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகளும் வெளிவந்துள்ளன.
எனவே இவ்வாறு இப்படி சிபிஐ விசாரணை, உயர்மட்ட குழுவின் ஆய்வு எதுவுமே முடிவதற்கு முன் அமைச்சர் நீட் ரத்து இல்லை என்று அறிவிப்பது மேற்கண்ட விசாரணைகளை பாதிக்காதா. அவையெல்லாம் வெறும் கண் துடைப்பு என்ற எண்ணத்தை உருவாக்கின்றன. இந்நிலையில், நீட் தேர்வு ரத்தாக வேண்டும் என்கிற தமிழ்நாட்டின் குரல் இன்று தேசத்தின் பல மாநிலங்களின் குரலாக மாறி இருக்கிறது. இந்த சூழலில் கோரிக்கையை பரிசீலிக்க மறுப்பது அராஜகத்துவத்தை காட்டுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: குற்றச்சாட்டு பதிவுக்கு நேரில் ஆஜராக செந்தில் பாலாஜி; என்ன காரணம்?