சென்னை: சென்னை திருவொற்றியூரில் வாயு கசிவு புகாருக்கு உள்ளான தனியார் பள்ளியில் 5க்கும் மேற்பட்ட மாணவிகள் திடீரென மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை திருவொற்றியூர் கிராம தெருவில் விக்டோரியா என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதையடுத்து மயக்கம் அடைந்த மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் பள்ளி மூடப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வந்த பெற்றோர்கள் பள்ளி வாசலை முற்றுகையிட்டு வாயு கசிவு எப்படி ஏற்பட்டது? எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மீண்டும் வாயு கசிவா?: இந்நிலையில் பள்ளிக்கு வந்த 5க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இன்று மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர். இதில் பாதிப்படைந்த மாணவிகளை பெற்றோர்கள் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆய்வில் அறியப்படாத காரணம்: கடந்த முறை வாயு கசிவு ஏற்பட்ட போது 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வாயு கசிவு ஏற்பட்ட பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு செய்தும் பள்ளியில் கசிந்தது என்ன வாயு என்பது தெரிய வரவில்லை.
இதையும் படிங்க: பட்டாக் கத்தியுடன் மிரட்டிய இளைஞர்கள்... அலறிய வியாபாரிகள்.. தேனியில் பரபரப்பு..!
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்நிலையில் அதே பள்ளயில் மாணவிகள் மயக்கம் அடைந்து பாதிக்கப்பட்டிருப்பது பெற்றோர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்லவே பெற்றோர்கள் அஞ்சும் நிலையில் உள்ளனர். இதுகுறித்து பள்ளி கல்வி துறை நடவடிக்கை எடுக்குமா? பள்ளியில் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமா? என்பது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்