புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2ஆம் தேதி மாயமான நிலையில், கழிவுநீர் வாய்க்காலில் 5ம் தேதி சடலமாக மீட்கப்பட்டச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியில் கொள்ளப்பட்டது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சிறுமியின் கொலைக்கு நீதி வழங்க வேண்டியும், புதுச்சேரியில் போதைப் பொருள் ஒழிக்க வேண்டி பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் இந்தியா கூட்டணிக் கட்சிகள், அதிமுக, சமூக பொதுநல அமைப்புகள் சார்பில் பந்த் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் இளைஞர், மாணவர்களின் கூட்டியக்கம் என்ற அமைப்பை உருவாக்கி இன்று ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். இதற்காக அண்ணா சிலை அருகே திரண்ட இளைஞர்கள் ஊர்வலமாகச் சட்டசபை நோக்கிச் சென்றனர்.
அப்போது மாணவர்களை போலீசார் பேரிகார்டு அமைத்துத் தடுத்து நிறுத்த முயற்சித்த போது இளைஞர்களும், மாணவர்களும் பேரிகார்டுகளின் மீது ஏறிக் குதித்து, சட்டசபை நோக்கிச் சொல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்தியதில், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
மேலும், இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, இளைஞர் பெருமன்றம் எழிலன் உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரியில் தொடரும் போராட்டத்தால் சட்டசபை, ஆளுநர் மாளிகையைச் சுற்றிலும் பேரிகார்டுகள் அமைத்துப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாநிலங்களவைக்குச் செல்கிறார் கமல்ஹாசன் - மக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை!