சென்னை: மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 4000 க்கும் மேற்பட்ட மாணவி, மாணவிகள் பயின்றுவரும் இந்த பள்ளியில் இன்று வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்த நிலையில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், பள்ளியின் அலுவலகத்திற்கு வந்த ஈமெயிலில் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடித்துவிடும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம், மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தது.
உடனே மாங்காடு போலீசார் மற்றும் ஆவடி கமிஷனரக அலுவலகத்தில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் பள்ளி வளாகத்திற்கு வந்தனர். அதற்குள் மாணவர்கள் வகுப்பறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு மைதானத்தில் பாதுகாப்பாக நிற்கவைக்கப்பட்டு இருந்தனர்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள ஒவ்வொரு வகுப்பறைகளிலும் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். இதற்கிடையே, தகவல் அறிந்ததும் பிள்ளைகளின் பெற்றோர் அலறி அடித்தபடி பள்ளிக்கு வந்து மிகுந்த பதற்றத்துடன் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் நீண்ட நேரம் சோதனைக்கு பிறகும் வெடிகுண்டுகள் ஏதும் சிக்காத நிலையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.
இந்நிலையில், பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஒரே நேரத்தில் பள்ளியிலிருந்து மாணவர்களை பெற்றோர் அழைத்து சென்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பரபரப்பாகவும் காணப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாதி மறுப்பு திருமணம் - நெல்லை கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறையாடல்