மதுரை: பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக திகழ்ந்த நடனக்கலையின் ஒன்றான பிரேக் டான்ஸ் (BREAK DANCE) தற்போது விளையாட்டு போட்டிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு, இந்தாண்டு பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இணைக்கப்பட்டு, B BOY, B GIRL பிரிவில் 32 நாடுகள் வரை பங்கேற்றன.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து நடன விளையாட்டு சங்கச் செயலாளர் சித்தேஷ்வரன் கூறுகையில், “தற்போது இந்த பிரேக் டான்ஸ்-ஐ அடுத்தகட்டமாக எடுத்துச் செல்ல தமிழ்நாடு அரசு அங்கீகாரத்துடன், தமிழ்நாடு அனைத்து நடன விளையாட்டு சங்கம், அமெச்சூர் டான்ஸ் ஸ்போர்ட் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து, மதுரை மாவட்டம் அனைத்து நடன விளையாட்டு சங்கத்தை இன்று தொடங்கியுள்ளனர்.
இதன் மூலம் இந்த விளையாட்டுப் போட்டியை உலகளவில் எடுத்துச் செல்ல முன்னேற்பாடாக, தமிழ்நாடு அளவில், தேசிய அளவில் போட்டிகள் வைத்து ரேங்க் அடிப்படையில் வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மதுரை மாவட்ட அனைத்து நடன விளையாட்டு சங்கம் சார்பிலும், தமிழ்நாடு அனைத்து நடன விளையாட்டு சங்கம் சார்பிலும், 4வது மாநில நடன விளையாட்டு சாம்பியன்ஷிப் மற்றும் 1வது மாநில பிரேக்கிங் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டிகள், வருகிற ஜனவரி 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: தீபாவளி: கடந்த ஆண்டை விட காற்று மாசு குறைவு; தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் கூறிய தகவல் என்ன?
கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற உலக இளைஞர் பிரேக்கிங் டான்ஸ் சம்பியன்ஷிப் போட்டிக்காக, இந்தியா சார்பில் 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் தமிழ்நாட்டில் மதுரையைச் சேர்ந்த பிரேம் காந்தி, ஆராதன் என்ற இருவர் சென்னையில் நடைபெற்ற பிரேக் டான்ஸ் போட்டியில் 8 ரேங்கிற்குள் வந்து இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.
மேலும், இந்த பிரேக்கிங் டான்ஸ் விளையாட்டுப் போட்டிகள் மூலம் தமிழக விளையாட்டு வீரர்கள் அதிகளவு தேர்வு செய்யப்படுவார்கள். தமிழக விளையாட்டுத் துறையின் மூலம் உயர்கல்வி, அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு என அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறினார்.
பெற்றோர், டான்ஸ்-ஐ பொழுதுபோக்கு நிகழ்வாக பார்க்காமல் ஒரு விளையாட்டாக பாருங்கள் என்றும், ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி ஆப் தமிழ்நாட்டிற்கு (Sports Development Authority of Tamil Nadu) எங்களது கோரிக்கையை கொடுத்துள்ளோம் என்றும், இதற்கு அங்கீகாரம் கிடைத்தால் இதுபோன்ற ஏழை எளிய வீரர்களின் வாழ்வாதாரத்தை இம்முயற்சி மேம்படுத்தும் என்றும் மதுரை மாவட்ட அனைத்து நடன விளையாட்டு சங்கத் தலைவர் கார்த்திகேயன் கூறினார்.