சேலம்: சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள 110-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கலைக் கல்லூரிகளில் இணைவு பெற்று செயல்படுகிறது. அத்துடன் பல்கலைக்கழகத்தில் 27 துறைகளும் உள்ளன.
பல்கலைக்கழகத்தின் கீழ், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர் மாணவிகள் இளங்கலை, முதுநிலை, ஆய்வு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு பருவத்தேர்வுகளை தேர்வுகள் கட்டுப்பாட்டு பிரிவு நடத்தி முடிவுகளை அறிவித்து வருகிறது. ஒவ்வொரு பருவத்தேர்வின் போதும், மாணவர்கள் எழுதும் பாடத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதனிடைய, பருவத்தேர்வு கட்டணத்தை உயர்த்துவதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனை அடுத்து இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனக் கோரிக்கையை எழுந்துள்ளது. இது தொடர்பாக, மாணவர் சங்கத்தினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இருப்பினும், பருவத்தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இளங்கலை மாணவர்களுக்கு ஒரு தாளுக்கு ரூ.85 ஆக இருந்து தேர்வு கட்டணத்தை ரூ.100 ஆகவும், முதுநிலை மாணவர்களுக்கு ஒரு தாளுக்கு ரூ.150 ஆக இருந்த கட்டணத்தை ரூ.175 ஆகவும் உயர்த்தியுள்ளனர். பருவத்தேர்வுக்கான செய்முறை தேர்வையும் சேர்த்து ஒவ்வொரு மாணவருக்கும் சராசரியாக 12-க்கும் அதிகமான தாள்களை எழுதுகின்றனர். இதனால், இந்த தேர்வு கட்டணம் உயர்வை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
தேர்வு கட்டணத்தை உயர்த்தி மாணவர் மீது கடுமையான திணித்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் சேலம் உட்பட நான்கு மாவட்டங்களில் பயின்று வரும் லட்சக்கணக்கான ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த தேர்வு கட்டண உயர்வை உடனடியாக பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் திரும்ப பெற வேண்டுமென மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: தேசிய தேர்வு முகமை தலைவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்! புதிய தலைவர் நியமனம்! 7 பேர் கொண்ட குழு அமைப்பு! - NTA New Head